வேலூர் மண்டல பொதுப்பணித்துறைபெண் அதிகாரியின் கார், வீட்டில் ரூ 20¾ லட்சம் சிக்கியது. லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி
வேலூர் மண்டல பொதுப்பணித்துறை தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளரின் கார், வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.20 லட்சத்து 85 ஆயிரம் சிக்கியது.
வேலூர்
வேலூர் மண்டல பொதுப்பணித்துறை தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளரின் கார், வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.20 லட்சத்து 85 ஆயிரம் சிக்கியது.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்
வேலூர் மண்டல பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (தொழில்நுட்ப கல்வி) அலுவலகம் வேலூர் தொரப்பாடி தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ளது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
இதன் செயற்பொறியாளராக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த ஷோபனா (வயது 57) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இந்த 9 மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், என்ஜினீயரிங் கல்லூரிகளில் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்குதல், ஒப்பந்தம் விடுதல், ஒப்பந்த தொகைக்கு அனுமதி அளிப்பது, பணிகளை ஆய்வு செய்தல் போன்றவை செயற்பொறியாளரின் பணியாகும்.
கார், வீட்டில் போலீசார் சோதனை
தீபாவளி பண்டிகையையொட்டி கட்டிட ஒப்பந்தாரர்களிடம் செயற்பொறியாளர் ஷோபனா லட்சக்கணக்கில் லஞ்சம் பெறுவதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கடந்த 2 நாட்களாக செயற்பொறியாளரின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் செயற்பொறியாளரின் அரசு கார் தொரப்பாடியில் இருந்து அரியூர் செல்லும் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றின் அருகே நின்றது. கார் டிரைவர் ஓட்டலில் உணவு வாங்கி விட்டு வந்தார்.
சிறிதுநேரத்துக்கு பின்னர் கார் அங்கிருந்து தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள குடியிருப்பை நோக்கி சென்றது. அந்த காரை பின்தொடர்ந்து சென்ற லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் (பொறுப்பு) தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், விஜய், விஜயலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் சிறிது தொலைவில் திடீரென காரை நிறுத்தி அதிரடியாக சோதனை செய்தனர். அதில், ஒரு துணிப்பையில் 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.5 லட்சம் இருந்தன. அந்த பணத்துக்கு எவ்வித கணக்கும் இல்லை. அதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
ரூ.20¾ லட்சம் சிக்கியது
இதுகுறித்து வேலூர் மாவட்ட அலுவல் ஆய்வுக்குழு துணை அலுவலர் முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் ஷோபனா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணியளவில் செயற்பொறியாளர் குடியிருப்பு வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். வீட்டின் பல்வேறு இடங்களில் பணம் கட்டு, கட்டாக இருந்தன. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.15 லட்சத்து 85 ஆயிரம், ரூ.3 லட்சத்து 92 ஆயிரத்துக்கான 3 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அலுவலகம் தொடர்பான 18 ஆவணங்கள் வீட்டில் இருந்தன. அவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுதொடர்பாக செயற்பொறியாளர் ஷோபனா, கார் டிரைவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனை காலை 8 மணிக்கு நிறைவடைந்தது.
வேலூர் மண்டல பொதுப்பணித்துறை தொழில்நுட்பகல்வி செயற்பொறியாளரின் கார், வீட்டில் கணக்கில் வராத ரூ.20 லட்சத்து 85 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூர் வீட்டில்...
அதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேருநகர் 2-வது மெயின்தெருவில் உள்ள ஷோபனாவின் வீட்டில் அந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அங்கேயும் கட்டுக்கட்டாக பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.