சதுப்பேரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் குடியிருப்புகளை சூழ்ந்தது

நீர்வரத்து கால்வாய் தூர் வாரப்படாததால் சதுப்பேரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. அதையடுத்து 40 குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Update: 2021-11-03 15:04 GMT
வேலூர்

நீர்வரத்து கால்வாய் தூர் வாரப்படாததால் சதுப்பேரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. அதையடுத்து 40 குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

சதுப்பேரி ஏரி நிரம்பியது

வடகிழக்கு பருவமழை காரணமாக வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதனால் வேலூர் மாவட்டத்தின் ஏரி, ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களின் நீர் ஆதாரமாக சதுப்பேரி ஏரி விளங்கி வருகிறது.

வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக பல ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சதுப்பேரி ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இதனை அறிந்த பொதுமக்கள் ஏரியின் உபரிநீர் வெளியேறும் பகுதியில் குடும்பம், குடும்பமாக சென்று உற்சாகமாக குளித்து வருகிறார்கள். சதுப்பேரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் நீர்வரத்து கால்வாய் வழியாக சென்று பாலாற்றில் கலப்பது வழக்கம்.
குடியிருப்புகளை சூழ்ந்தது

சதுப்பேரி ஏரி நீர்வரத்து கால்வாய் தூர்வாரப்படவில்லை. மேலும் சில பகுதிகளில் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனால் சதுப்பேரி ஏரியின் உபரிநீர் பாலாற்றில் சென்று கலக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை சதுப்பேரி ஏரியில் இருந்து அதிகப்படியான உபரிநீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. கொணவட்டம், திடீர்நகர், சேண்பாக்கம் கோரிமேடு, முள்ளிப்பாளையம், கன்சால்பேட்டை பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தெரு மற்றும் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை காணப்பட்டது. அதனால் அவதியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பள்ளியில் தங்க வைப்பு

அதன்பேரில் வேலூர் தாசில்தார் செந்தில் மற்றும் வருவாய்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டு வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினரை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி தண்ணீரை பாலாற்றுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். கொணவட்டம் ரகீம்ஷாப் தெரு, சேண்பாக்கம் கோரிமேட்டில் அதிகளவு தண்ணீர் தேங்கி நின்றது. அவுலியாஷா தர்கா தெருவில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியை சுற்றி குளம்போல் தண்ணீர் தேங்கியது.

அதையடுத்து அங்கு வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் வீடுகளில் இருந்து அத்தியாவசிய பொருட்களை எடுத்து கொண்டு வெளியேறினர். சிலர் தங்கள் உறவினரின் வீடுகளுக்கு சென்றனர். 40 குடும்பத்தினர் கொணவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் முற்றிலும் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்