சுத்திகரிப்பு நிலைய கட்டிடம் மண்ணில் புதைந்தது

திருப்பூரில் பெய்து வரும் தொடர் மழையால் ரூ.29 கோடியில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டிடம் மண்ணில் புதைந்தது.

Update: 2021-11-03 13:47 GMT
வீரபாண்டி
திருப்பூரில் பெய்து வரும் தொடர் மழையால் ரூ.29 கோடியில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டிடம் மண்ணில் புதைந்தது. பாதுகாப்பு கருதி பொக்லைன் எந்திரம் மூலம் அந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. 
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
திருப்பூர் அருகே சின்னாண்டிபாளையம் குளம் அருகே மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.29.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து  கடந்த 2018ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கின. கட்டிடப் பணி தொடங்கிய போதே நீர்நிலை பகுதியில் கட்டிடம் கட்டப்படுவதாக புகார் கூறி அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
ஆனாலும் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி 3 கட்டிடங்கள் தனித்தனியாக கட்டப்பட்டன. தற்போது கட்டித்தின் கான்கிரீட் பணி முடிந்து விட்டது. சுவர்களில் சிமெண்டு பூச்சு மட்டுமே நடைபெற வேண்டும். அந்த பணியும் முடிந்து சுத்திகரிப்பு எந்திரங்களை பொருத்தினால் கட்டிடம் பயன்பாட்டிற்கு வந்து விடும். 
இடிப்பு
இந்த நிலையில் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சுத்திகரிப்பு நிலைய கட்டிடத்தை சுற்றி மழை நீர் தேங்கி நிற்கிறது. நேற்று 3 கட்டிடங்களில் ஒரு கட்டிடம் மண்ணில் புதைந்து சாய்ந்து இருந்தது. சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று கட்டிடத்தை பார்வையிட்டனர். நேரம் செல்ல செல்ல கட்டிடத்தின் விரிசல் அதிகமானது. இதையடுத்து விரிசல் விழுந்த கட்டிடம் நேற்று மாலையில் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை சுற்றி உள்ள மற்ற  2 கட்டிடங்களும் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கட்டிடத்தை சுற்றி மழை நீர் தேங்கி உள்ளது. புதிய கட்டிடம் திறப்பு விழா காணும் முன்னே இடிக்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
தீர்வு காணப்படும்
முன்னதாக கட்டிடத்தை பார்வையிட்ட  மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி கூறியதாவது:-
இந்த கட்டிடம் கட்டப்பட்டு வரும் இடமானது குளம் இருந்த பகுதி அல்ல. இந்த இடத்திற்கு அருகே சாக்கடை கால்வாய் மட்டுமே செல்கிறது. கட்டிடம் கட்டுவதற்கு முன்பாக அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னரே கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. 
மேலும் திருப்பூர் மாநகரில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக தண்ணீர் வெளியே செல்ல வடிகால்கள் இல்லாத நிலையில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு விரைந்து தீர்வு காணப்படும். இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கப்படும். இங்கு கழிவுநீர் கால்வாய் அமைப்பதால் துர்நாற்றம் ஏற்படும் என்ற அச்சத்தில் தான் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை உள்ளது. பொதுமக்கள் இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.
---------------------

மேலும் செய்திகள்