20 சதவீத போனஸ் வழங்கக்கோரி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கூடலூர் சாலிஸ்பரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை முன்பு 20 சதவீத போனஸ் கேட்டு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-11-03 13:32 GMT
கூடலூர்

கூடலூர் சாலிஸ்பரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை முன்பு 20 சதவீத போனஸ் கேட்டு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

20 சதவீத போனஸ்

நீலகிரி மாவட்டத்தில் இன்கோசர்வ் கீழ் 14 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிக்கட்டி, கைகாட்டி, மற்றும் மஞ்சூர் பகுதியில் உள்ள 3 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தங்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என மீதமுள்ள கூட்டுறவு தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகம் தங்களுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

காத்திருப்பு போராட்டம்

கூடலூர் 2-ம் மைல் சாலிஸ்பரி தேயிலை தொழிற்சாலைக்கு நேற்று காலை 9 மணிக்கு வேலைக்கு வந்த தொழிலாளர்கள் தொழிற்சாலை முன்பாக திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தொழிற்சாலைக்கு நிர்வாகம் விடுமுறை அறிவித்தது. இதனால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்தனர். தொடர்ந்து வேலை நாளான இன்றைய தினம் தொழிற்சாலை இயங்கவும், தொழிலாளர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

11-ந் தேதி பேச்சுவார்த்தை

அரசு அறிவித்த 10 சதவீத போனஸ் தொகையை அனைத்து தொழிற்சாலைகளிலும் ஒரே மாதிரியாக வழங்காமல் ஒரு சில தொழிற்சாலைகள் அதிகமாக வழங்கியதால் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளிடம் பேசிய போது உயர் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளனர்.

மேலும் இப்பிரச்சனை தொடர்பாக வருகிற 11-ந் தேதி குன்னூரில் தொழிலாளர் நல ஆணையர் முன்பாக நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். அதன்பின்னர் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்