பெண்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்க புதிய கட்டிடம்
ஊட்டியில் பெண்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்க புதிய கட்டிடம் திறக்கப்பட்டு உள்ளது.;
ஊட்டி
ஊட்டியில் பெண்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்க புதிய கட்டிடம் திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 364 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
சேவை மையம்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் கொடுமைகளுக்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளிக்கவும் மத்திய அரசு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுவரை 364 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை மேல் பகுதியில் ஒருங்கிணைந்த சேவை மையம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. மத்திய அரசு நிதி, சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதி என மொத்தம் ரூ.86 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் கட்டணமில்லா எண் 181-ஐ தொடர்பு கொள்ள உதவி மையம், அலுவலக அறை, தற்காலிக பாதுகாப்பு மையம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
பாலியல் புகார்கள்
ஒருங்கிணைந்த சேவை மையம் புதிய கட்டிடம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், குடும்பத்தில் ஏற்படும் வன்முறைகள், தாங்கள் பணிபுரியும் இடங்களில் மற்றவர்களால் ஏற்படும் பிரச்சனைகள், பொதுவெளிகளில் ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்ட உதவி
பிரச்சினைகளுக்கு உள்ளான பெண்கள், குழந்தைகளுக்கு மன நல ஆலோசனை இந்த மையத்தில் வழங்கப்படுகிறது. மேலும் போலீஸ், சட்ட உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஒரு போலீசார், ஒரு வக்கீல் மையத்தில் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கவும், பாலியல் தொந்தரவுக்கு உள்ளானவர்களை மீட்டு தற்காலிகமாக மையத்தில் 5 நாட்கள் தங்க வைக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
இரவு நேரத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவார்கள். மேலும் குடும்ப பிரச்சனை காரணமாக கணவர் அடித்து துன்புறுத்தும் பெண்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.