வங்கியில் இருந்து பேசுவதாக ரூ.1½ லட்சம் மோசடி
ராமநாதபுரத்தில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரியிடம் வங்கியில் இருந்து பேசுவதாக ரூ.1½ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரியிடம் வங்கியில் இருந்து பேசுவதாக ரூ.1½ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குறுஞ்செய்தி
ராமநாதபுரம் அருகே உள்ள முத்துப்பேட்டை ஏஞ்சலோ நகரை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரின் மகன் ஜேம்ஸ் மாத்யூ (வயது64). ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரியான இவர் தனது செல்போனை பார்த்து கொண்டிருந்தபோது ஒரு குறுஞ்செய்தி இணைப்பு வந்துள்ளது.
வங்கியில் இருந்து அனுப்புவது போன்று போலியான இணைப்பு குறுஞ்செய்தியை திறந்து பார்த்தபோது அவரின் வங்கி கணக்கினை காலாவதியாவதை தடுக்கவும் மேம்படுத் தப்பட்ட சேவையை பெற உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
வங்கியில் இருந்து வந்துள்ளதாக நினைத்து அதனை திறந்து அதில் குறிப்பிடப்பட்டு இருந்த வழிமுறைகளை பின்பற்றி உள்ளார். வங்கி கணக்கு விவரம், ஏ.டி.எம். கார்டு விவரங் களை குறிப்பிட்டு பூர்த்தி செய்த சில நிமிடங்களில் ஓ.டி.பி. எண் வந்துள்ளது. அந்த எண்ணை அதில் குறிப்பிட்டு விவரங்களை பூர்த்தி செய்த சில நிமிடங்களில் அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 500 பணம் எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது.
அதிர்ச்சி
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜேம்ஸ் மாத்யூ தன் மூலமே தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடியாக எடுத்துக்கொண்டதை தாமதமாக உணர்ந்தார். இதுகுறித்து அவர் சைபர்கிரைம் பிரிவில் ஆன்லைன் மூலம் புகார் செய்தார்.
இதுதொடர்பாக ராமநாதபுரம் சைபர் கிரைம் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரியிடம் பணம் மோசடி செய்தவர்களை தேடிவருகின்றனர்.