திருப்பூர்
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பூரில் ஆடை விற்பனை தீவிரமாக நேற்று நடந்தது. போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி தவித்தனர்.
இன்று தீபாவளி பண்டிகை
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வியாழக்கிழமைகொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் போது அனைவரும் புத்தாடைகள் அணிந்து மகிழ்வது வழக்கம். இதன் காரணமாக புத்தாடைகள் வாங்க கடந்த சில நாட்களாகவே ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதி வந்தது.
இந்த நிலையில் நேற்று திருப்பூரில் ஆடை விற்பனை தீவிரமாக நடந்தது. புதுமார்க்கெட் வீதி, குமரன் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பலரும் புத்தாடைகள் வாங்கி மகிழ்ந்தனர்.
ஆடை விற்பனை தீவிரம்
இதுபோல் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் சென்றனர். இதன் காரணமாக மாநகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. இதனால் மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகளும் நெரிசலில் சிக்கி தவித்தனர்.
மாநகரில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை முதல் மதியம் வரை மழை மேகங்கள் திரண்டு இருந்தன. ஆனால் மழை பெய்யாமல் இருந்ததால் ரோட்டோர கடைகளிலும் ஆடை விற்பனை மும்முரமாக நடந்தது. பொதுமக்கள், தொழிலாளர்கள் என பலரும் தங்களுக்கு தேவையான ஆடைகளை வாங்கி சென்றனர். இதுபோல் பட்டாசுகள் கடைகளிலும் பட்டாசுள் விற்பனையும் தீவிரமாக நடைபெற்றது. இனிப்பு மற்றும் பலகார கடைகளில் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்தமானவற்றையும் வாங்கி சென்றனர். இதுபோல் சொந்த ஊர்களுக்கு பலரும் சென்றதால், பஸ் மற்றும் ரெயில் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முண்டியடித்தபடி பலரும் சொந்த பஸ்கள், ரெயில்களில் ஏறி சென்றனர்.
-