கல்லறை திருநாள்: கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்கள் மூதாதையர்கள், குடும்பத்தினருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
சென்னை,
கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்களுடைய குடும்பத்தின் மூதாதையர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் யாராவது இறந்து போய் இருந்தால் அவர்களை நினைவுகூரும் வகையில், கல்லறை தோட்டங்களுக்கு சென்று அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
அந்தவகையில் சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் உள்ள கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் பலர் குடும்பத்தினருடன் வந்து இறந்த தங்களுடைய மூதாதையர்கள், குடும்பத்தினர், உறவினர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியதோடு, பிரார்த்தனை மேற்கொண்டதையும் பார்க்க முடிந்தது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கல்லறை திருநாள் அனுசரிக்க அனுமதிக்கவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து கல்லறை தோட்டங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
திருச்சபை பாதிரியார்கள், கல்லறை தோட்டங்களில் சிறப்பு திருப்பலியை நடத்தினர்.