ரூ.18 கோடி ஹவாலா மோசடி: சென்னை வாலிபருக்கு 7 ஆண்டு சிறை; ரூ.1 கோடி அபராதம் - சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு
ரூ.18 கோடி ஹவாலா மோசடி வழக்கில் சென்னை வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 கோடி அபராதம் விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
சென்னை அங்கப்பன்நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் லியாகத் அலி (வயது 36). இவர் கடந்த 2016-ம் ஆண்டு துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பல கோடி மதிப்புள்ள மின்னணு சாதனங்களை சரக்கு விமானங்களிலும், கப்பல்கள் மூலமாகவும் இறக்குமதி செய்ததாக போலி ஆவணங்கள் தயாரித்து, கணக்கில் வராத ஹவாலா பணம் சுமார் ரூ.18 கோடியே 66 லட்சத்து 54 ஆயிரத்தை வெளிநாடுகளுக்கு கடத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து சென்னை மண்டல மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி, லியாகத் அலியை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி திருவேங்கடசீனிவாசன் முன்னிலையில் நடந்தது. அமலாக்கத்துறை சார்பில் சிறப்பு அரசு வக்கீல் என்.ரமேஷ் ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, லியாகத் அலி மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
விசாரணையின்போது லியாகத் அலியிடம் இருந்து முடக்கம் செய்யப்பட்ட ரூ.1.75 கோடியை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி தனது தீர்ப்பில், ‘இந்தியாவில் நிதி நிர்வாக ஒழுங்கு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மோசமடைவதற்கு பண மோசடி குற்றம் மிகவும் அபாயகரமான ஒன்றாக இருக்கின்ற நிலையில் அதை தடுப்பது கோர்ட்டின் கடமையாகும். பணம் தீயது அல்ல, தீயஎண்ணங்களுக்கு மூலகாரணம் என்று தேசத்தந்தை மகாத்மா காந்தி கூறி உள்ளார். காந்தியின் கருத்துப்படி பணம் தீயஎண்ணங்களுக்கு மூலகாரணமாக அமையும்பட்சத்தில் அது சமுதாயத்தில் பொருளாதார குற்றத்தை அதிகரிக்கச் செய்துவிடும். அதை தடுப்பதற்கு சரியான நடவடிக்கை தேவை' என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.