விழா நடந்தது...பணி நடக்கவில்ைல
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் ஊராட்சி மடம் சாலையில் இருந்து தேவர்மலை புட்டப்பனூர் தெருவரை மண்சாலையாக இருந்தது. இந்த மண்சாலையில் தார் ரோடு போடுவதற்காக 10 மாதங்களுக்கு முன் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. ஆனால் அதன்பின்னர் எந்த பணியும் நடைபெறவில்லை. பாதை தற்போது குண்டும்-குழியுமாக உள்ளது. பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாமல் பரிதவிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், தேவர்மலை
சாய்ந்த மின்கம்பம்
பெரியகொடிவேரி பேரூராட்சி 7-வது வார்டில் சாமிநகர் நேரு வீதியில் அரசு தொடக்கப்பள்ளிக்கு அருகில் ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. நன்றாக இருந்த இந்த மின்கம்பத்தின் மீது வேன் மோதியதால் இவ்வாறு ஆகிவிட்டது. ெபாதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் உள்ள இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் ஆபத்தான அந்த மின்கம்பத்தை மாற்றுவார்களா?
பொதுமக்கள், பெரியகொடிவேரி.
சாக்கடை வசதி இல்லை
சென்னிமலை அருகே உள்ள கவுண்டச்சிப்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கணபதிநகரில் சுமார் 100 வீடுகள் உள்ளன. ஆனால் இங்கு முறையான சாக்கடை வசதி இல்லை. இதனால் கழிவு நீர் பல இடங்களில் வெளியேறி தேங்கி நிற்கிறது. பல வருடங்களாக இப்பகுதி மக்கள் சாக்கடை வசதி கேட்டு முறையிட்டு வருகிறார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது மழை காலம் என்பதால் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கணபதி நகரில் உடனே சாக்கடை வசதி அமைத்துத்தர ஆவன செய்யவேண்டும்.
பொதுமக்கள், கணபதிநகர்.
நடுவீதியில் மின்கம்பம்
கொடுமுடி அடுத்த சென்னசமுத்திரம் பேரூராட்சி சோளக்காளிபாளையத்தில் அரசு மருத்துவமனை ரோட்டில், கிழக்கு வீதியின் நடுவில் ஒரு மின்கம்பம் உள்ளது. இது போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கூட இதனால் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடுத்தெருவில் நிற்கும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
சந்தானம், சோளக்காளிபாளையம்.
தெரு நாய்கள் தொல்லை
ஈரோடு மூலப்பாளையம் பாரதிநகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி சென்று கடிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். இரவு நேரங்களில் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பாரதிநகர்.
தேங்கி கிடக்கும் சாக்கடை
ஈரோடு மாவட்டம் சிவகிரி நெடுஞ்செழியன் தெருவில் சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமல் நீண்ட நாட்களாக சாக்கடை கழிவுகள், குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனாலும் நடவடிக்கை இல்லை. தொற்று நோய்கள் பரவும் காலம் இது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இனியாவது பேரூராட்சி நிர்வாகம் நெடுஞ்செழியன் தெருவில் தேங்கிக்கிடக்கும் சாக்கடையை தூர்வாருவார்களா?
பொதுமக்கள், சிவகிரி.
பாராட்டு
பவானிசாகர் தொகுதி தேசியபாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது கருப்பகவுண்டன்புதூர். இங்குள்ள ஒரு மின்கம்பத்தின் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிய ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதைத்தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் உடனே சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்து பழைய மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைத்துள்ளனர். எனவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்திக்கும், நடவடிக்ைக எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் கருப்பகவுண்டன்புதூர் மக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கருப்பகவுண்டன்புதூர்.