தேசிய கட்சிகளின் பண பலத்தால் ஜனதா தளம் (எஸ்) தோல்வி; தேவேகவுடா குற்றச்சாட்டு
தேசிய கட்சிகளின் பண பலத்தால் ஜனதா தளம்(எஸ்) தோல்வி அடைந்துள்ளதாக தேவேகவுடா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு: தேசிய கட்சிகளின் பண பலத்தால் ஜனதா தளம்(எஸ்) தோல்வி அடைந்துள்ளதாக தேவேகவுடா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) தோல்வி அடைந்தது குறித்து அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முஸ்லிம் வேட்பாளர்
இடைத்தேர்தலில் எங்கள் கட்சி 2 தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. மக்களின் முடிவை ஏற்கிறேன். சிந்தகியில் இந்து-முஸ்லிம் பாகுபாடு இல்லை. அதனால் நாங்கள் அங்கு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தினோம். ஆனால் எங்களுக்கு லிங்காயத் மக்கள் வாக்களிக்கவில்லை.
சிந்தகிக்கும், எனக்கும் பழமையான தொடர்பு உள்ளது. அதனால் நான் அங்கு அதிகளவில் பிரசாரம் மேற்கொண்டேன். 40 ஆண்டுகளுக்கு முன்பு நான் அங்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்தேன். அதனால் மக்கள் எங்கள் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.
சிந்தகி தொகுதியில் ஒரு ஓட்டுக்கு பா.ஜனதா ரூ.10 ஆயிரம் கொடுத்தது. காங்கிரசும் பணம் வினியோகம் செய்தது. தேசிய கட்சிகளின் பண பலம் மற்றும் அவர்களின் மோசமான அரசியல் காரணமாக ஜனதா தளம் (எஸ்) கட்சி தோல்வி அடைந்தது.
இந்த தோல்வியை கண்டு நாங்கள் துவண்டு விடமாட்டோம். 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கு இப்போது இருந்தே தயாராவோம். சட்டசபை தேர்தலில தேசிய கட்சிகள் அதிகளவில் பணத்தை வினியோகம் செய்ய முடியாது. அப்போது நாங்கள் வெற்றி பெறுவோம்.
பலப்படுத்தும் பணிகள்
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1½ ஆண்டு உள்ளது. அதனால் கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்வோம். 123 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்று நாங்கள் சபதம் எடுத்து பணியாற்றி வருகிறோம். பழைய மைசூரு பகுதியில் குமாரசாமி கட்சியை பலப்படுத்துவார். வட கர்நாடகத்தில் கட்சியை பலப்படுத்தும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன்.
மாதத்தில் 2 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்துவேன். ஜி.டி.தேவேகவுடா மகனுடன் குமாரசாமி மகன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர்கள் எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.