குறைந்த விலைக்கு தங்க நாணயங்கள் தருவதாக கூறி நிதி நிறுவன அதிபரிடம் ரூ.15 லட்சம் பறித்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் கைது சேலம் அருகே பரபரப்பு
குறைந்த விலைக்கு தங்க நாணயங்கள் தருவதாக கூறி நிதி நிறுவன அதிபரிடம் ரூ.15 லட்சம் பறித்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓமலூர்,
சேலம் அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நிதி நிறுவன அதிபர்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பெரும்பாலை விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 36). நிதி நிறுவன அதிபர். இவர், அந்த பகுதி மக்களிடம் தீபாவளி சீட்டு என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் பணம் வசூல் செய்து வந்தார். தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இனிப்பு, காரம், பட்டாசு மற்றும் ஒரு பவுன் தங்க நாணயம் தருவதாக கூறி பணம் வசூல் செய்து வந்தார்.
இதற்கிடையே பழனியை தொடர்பு கொண்ட சேலத்தை சேர்ந்த சிலர், ஒரு பவுனுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை குறைத்து தங்க நாணயம் கொடுப்பதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய பழனி, தன்னுடைய நண்பர் பாஸ்கரை அழைத்துக்கொண்டு சேலத்துக்கு புறப்பட்டார். மேலும் தங்க நாணயங்கள் வாங்குவதற்காக ரூ.15 லட்சத்தையும் எடுத்துக்கொண்டு ஒரு காரில் சேலத்துக்கு வந்தார்.
போலீஸ் எனக் கூறிய கும்பல்
சேலத்துக்கு வந்தபோது, பழனியை தொடர்பு கொண்ட அந்த கும்பல் ஓமலூர் அருகே ஆர்.சி. செட்டிப்பட்டி பிரிவு ரோட்டில் தனியார் ஓட்டல் அருகில் வரும்படி கூறியுள்ளது.
பழனியும், அவருடைய நண்பரும் ஆர்.சி. செட்டிப்பட்டி அருகில் வந்தபோது அவர்களை 6 பேர் கும்பல் வழிமறித்தது. அப்போது தங்களை இன்ஸ்பெக்டர் என்றும், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் என்றும், விசாரணைக்கு போலீஸ் நிலையம் வரும்படியும் அவர்களை அழைத்துள்ளது.
ரூ.15 லட்சம் பறிப்பு
இதில் சந்தேகம் அடைந்த பழனியும், பாஸ்கரும் அவர்களிடம் வாக்குவாதம் செய்யவே அங்கிருந்து அவர்கள் ரூ.15 லட்சத்துடன் தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் ஒருவரை இருவரும் பிடித்து ஓமலூர் போலீசில் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த உதயசங்கர் (28) என்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய மேல் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
சேலம் அம்மாபேட்டை காமராஜர் நகரை சேர்ந்த அண்ணாச்சி என்ற பெரியசாமி (65) என்பவர்தான் முதலில் பழனியை தொடர்பு கொண்டு குறைந்த விலைக்கு தங்க காசுகள் தருவதாக கூறியுள்ளார். அதன்பிறகு பெரியசாமியின் மகன் ஜெகன் (33), அவருடைய மருமகன் சங்ககிரியை சேர்ந்த பரணிதரன், மணக்காடு வக்கீல் விஜயகுமார், கொண்டலாம்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கும்பலாக இந்த துணிகர செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இன்ஸ்பெக்டரின் டிரைவர்
மேலும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டரின் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். தற்போது இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக இருப்பதால் சரவணன் இந்த மோசடி கும்பலுடன் சேர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுதவிர பரணிதரன் காரை போலீசார் சோதனையிட்ட போது அங்கு கட்டுக்கட்டாக ரூ.5 லட்சம் போலி நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 500 ரூபாய் நோட்டுகள் 10 கட்டுகள் இருந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
6 பேர் கைது
மேலும் உதயசங்கர் கொடுத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் உள்பட 5 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த கும்பல் போலி ரூபாய் நோட்டுகள் மூலம் யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. பிடிபட்ட 6 பேரையும் போலீசார் நேற்று இரவு கைது செய்து விசாரணை நடத்தினர்.
குறைந்த விலைக்கு தங்க நாணயங்கள் தருவதாக கூறி நிதி நிறுவன அதிபரிடம் ரூ.15 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக சப்-இன்ஸ்பெக்டரே இந்த செயலில் ஈடுபட்டு்ள்ளது போலீசாரை மட்டும் அல்லாமல் பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.