தஞ்சையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு

தஞ்சையில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் பங்கேற்று முன்னோர்கள் நினைவாக பிரார்த்தனை செய்தனர்.;

Update: 2021-11-02 20:07 GMT
தஞ்சாவூர்:
தஞ்சையில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் பங்கேற்று முன்னோர்கள் நினைவாக பிரார்த்தனை செய்தனர்.
கல்லறை திருநாள்
உலகம் முழுவதும் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 2-ந்தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இறந்து போன தங்களது உறவினர்களை வழிபடும் வகையில் இந்தநாளை கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளாக அனுசரிக்கிறார்கள். அதன்படி தஞ்சையில் உள்ள அனைத்து கல்லறை தோட்டங்களிலும் நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி கல்லறைகள் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு இருந்தன. தஞ்சை தூயபேதுரு ஆலய கல்லறை தோட்டம், தஞ்சை திரு இருதய பேராலய கல்லறை தோட்டம், நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள புனித சூசையப்பர் கல்லறை தோட்டம், புனித வியாகுல அன்னை ஆலய கல்லறை தோட்டம், மிக்கேல் சம்மனசு கல்லறை தோட்டம் உள்பட அனைத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் இறந்த தங்களது முன்னோர்களின் சமாதி முன்பு மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும் வழிபட்டனர்.சிலர் முன்னோர்களுக்கு பிடித்த இனிப்பு, குளிர்பானம், பிஸ்கட் போன்றவற்றை கல்லறை முன்பு படைத்து வழிபட்டனர். சிலர் முன்னோர்களை நினைத்து கண்கலங்கினர். கல்லறை திருநாளையொட்டி கல்லறை தோட்டங்கள் முன்பு ஏராளமான பூக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மெழுகுவர்த்திகளும் விற்பனை செய்யப்பட்டன.
பூண்டி மாதா பேராலயம்
பூண்டி மாதா பேராலயத்தில் கல்லறைத்திருநாள் நடைபெற்றது. இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியாகதுருகம் இயக்குனர் சாம்சன், உதவி பங்குதந்தையர்கள் இனிகோ, ஜான்சன், ஆன்மிகதந்தை அருளாநந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். பேராலயத்திற்குள் லூர்து சேவியர் கல்லறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து  பேராயத்திற்குள் உள்ள  லூர்து சேவியர் கல்லறையை பேராலய அதிபர் உள்ளிட்ட தந்தையர்கள் புனிதம் செய்து வணங்கினர். 
மாதாக்கோட்டை 
இதேபோல் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மாதாக்கோட்டை கிராம கல்லறை தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கல்லறைகளை சுத்தம் செய்து மெழுகுவர்த்தி ஏந்தி மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தனர். இதில் மாதாக்கோட்டை பங்குத்தந்தை வெரிங்டன் தலைமையில் அருட்சகோதரிகள்,   கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்