சாத்தூர்,
கோவில்பட்டி இந்திரா நகரில் வசித்து வருபவர் முத்துமாலை (வயது57). இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குமராபுரத்தில் தீப்பெட்டி உற்பத்தி செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். கோவில்பட்டியில் இருந்து தீப்பெட்டி தொழிற்சாலைக்கு தினமும் காலையில் முத்துமாலை, அவரது மனைவி அன்னலட்சுமி (46), மகன் முத்துஜோதி மற்றும் மருமகள் ஆகியோர் வருவது வழக்கம். இந்தநிலையில் தொழிற்சாலையில் இருந்து வீட்டிற்கு செல்ல கம்பெனியை பூட்டுவதற்காக காவலாளி அறையில் இருந்த சாவியை எடுப்பதற்காக அன்னலட்சுமி சென்றார். அப்போது அறையில் உள்ள கதவை திறந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அன்னலட்சுமி மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.