தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட்டம்: மழையால் கடைவீதிகளில் வியாபாரம் பாதிப்பு

புதுக்கோட்டையில் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், மழையால் கடைவீதிகளில் வியாபாரம் பாதிப்படைந்தது.

Update: 2021-11-02 18:43 GMT
புதுக்கோட்டை:
புதிய ஆடைகள்
தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புதுக்கோட்டையில் புதிய ஜவுளி ஆடைகள், பட்டாசுகள் மற்றும் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் கூட்டம் நேற்று காலையில் அலைமோதியது. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் திடீரென மழை பெய்ததால் கடைவீதிகளில் சாலையோர வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இந்த மழையினால் கடைவீதிகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
தார்ப்பாயை போட்டு துணி மற்றும் பொருட்களை மூடினர். மேலும் மழை தொடர்ந்து தூறிக்கொண்டே இருந்ததால் வியாபாரம் பாதிப்படைந்தது. பொதுமக்கள் மழையில் நனையாமல் இருக்க குடையை பிடித்தப்படி சென்று பொருட்கள் வாங்கினர். மழையின் போது கடைவீதிகளில் மக்கள் கூட்டம் சற்று குறைந்திருந்தது.
மழை அளவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-ஆதனக்கோட்டை-5, பெருங்களூர்-20, புதுக்கோட்டை-1.50, ஆலங்குடி-3, கந்தர்வகோட்டை-7.20, கறம்பக்குடி-10.90, மழையூர்-12.80, கீழணை-1.40, திருமயம்-1.60, அரிமளம்-7, ஆயிங்குடி-9.20, நாகுடி-3.40, மீமிசல்- 24, ஆவுடையார்கோவில்-2.20, மணமேல்குடி-10, இலுப்பூர்-1, குடுமியான்மலை-4, அன்னவாசல்-2.50, விராலிமலை-2.50, உடையாளிப்பட்டி-12, கீரனூர்-20, காரையூர்-19.
இதேபோல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கடலோர பகுதிகளான கட்டுமாவாடி, மீமிசல், மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையினால் எந்தவித பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்