கந்தர்வகோட்டை அருகே ஸ்கூட்டர்-வேன் நேருக்கு நேர் மோதல்; தம்பதி உள்பட 3 பேர் பலி தீபாவளிக்கு பொருட்களை வாங்க சென்றபோது பரிதாபம்

கந்தர்வகோட்டை அருகே தீபாவளிக்கு பொருட்கள் வாங்க சென்ற போது ஸ்கூட்டரும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தம்பதி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-11-02 18:29 GMT
கந்தர்வகோட்டை:
வேன்-ஸ்கூட்டர் மோதல் 
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே மோகனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 37). இவரது மனைவி சித்ரா (36). அதே ஊரை சேர்ந்த முருகேசன் மனைவி லட்சுமி (38). இவர்கள் 3 பேரும் நேற்று சுப்பிரமணியனின் ஸ்கூட்டரில் கந்தர்வகோட்டைக்கு தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தனர். 
அப்போது கந்தர்வகோட்டையை அடுத்துள்ள உள்ளமட்டங்கால் கிராமம் அருகே கந்தர்வகோட்டை-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் சென்ற போது, அந்த வழியாக கந்தர்வகோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி பெரியகோட்டை கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் ஓட்டி வந்த வேனும், சுப்பிரமணியன் ஓட்டி சென்ற ஸ்கூட்டரும், கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
3 பேர் பலி 
இதில் படுகாயமடைந்த சித்ரா, லட்சுமி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய சுப்பிரமணியனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சித்ரா, லட்சுமி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேனில் வந்தவர்கள் எந்த காயமின்றி உயிர்தப்பினர். 
சோகம்
இதுகுறித்து இறந்த லட்சுமியின் கணவர் முருகேசன் கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை ஓட்டி வந்த மோகனூர் அருகே உள்ள பெரியகோட்டை கிராமத்தை சேர்ந்த முருகானந்தத்தை (34) கைது செய்து சிறையில் அடைத்தனர். தீபாவளிக்கு பொருட்கள் வாங்க சென்ற தம்பதி உள்பட 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்