கரூரில் கல்லறை திருநாள் அனுசரிப்பு;முன்னோர்கள் நினைவாக கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

கரூரில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் பங்கேற்று முன்னோர்கள் நினைவாக பிரார்த்தனை செய்தனர்.

Update: 2021-11-02 18:27 GMT
கரூர், 
கல்லறை திருநாள்
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இறந்து போன தங்களது உறவினர்களை வழிபடும் வகையில் இந்தநாளை கிறிஸ்தவர்கள், திருநாளாக அனுசரிக்கின்றனர்.
அதன்படி கரூர் சர்ச் கார்னர், பாலம்பாள்புரம், பசுபதிபாளையம் பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டங்களில் நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. 
சிறப்பு பிரார்த்தனை
இதையொட்டி கல்லறைகள் சுத்தம் செய்யப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு இருந்தது. பின்னர் அவற்றுக்கு மாலை அணிவித்து பூக்கள் தூவி மரியாதை செய்தனர். மேலும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து இறந்தவர்களின் ஆத்மாக்கள் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக பாதிரியார் மூலம் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு கல்லறைகளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கரூர், திருமாநிலையூர், செங்குந்தபுரம், ஐந்துரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
லாலாபேட்டை
லாலாபேட்டை காவிரி கரையோரத்தில் கிறிஸ்தவர்களை அடக்கம் செய்வதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் கல்லறை தினம் அனுசரிப்பது வழக்கம். அதுபோல் நேற்று காலை கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்கள் சமாதியை தூய்மை செய்து பல்வேறு வண்ண மலர்களை தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து வழிபட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்