பெண்ணிடம் ரூ.4 லட்சம் நகை திருட்டு

கடலூர் வந்த பஸ்சில் பெண்ணிடம் ரூ.4 லட்சம் நகையை திருடிச்சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-11-02 18:04 GMT
கடலூர், 

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் அருள்ஜோதி. இவருடைய மனைவி அருணாதேவி (வயது 39). இவர் சம்பவத்தன்று சேலத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி கடலூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அந்த பஸ் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வந்த போது, 2 பெண்கள் ஏறினர். அவர்கள் அருணாதேவி இருக்கை அருகில் வந்து அமர்ந்தனர்.
அப்போது அதில் ஒரு பெண் தான் கையில் வைத்திருந்த சில்லரையை கீழே போட்டார். அதை அருணாதேவியை எடுத்து தருமாறு கூறியதாக தெரிகிறது. அவர் எடுத்த போது, மற்றொரு பெண் அவர் கையில் வைத்திருந்த பையில் இருந்து ஆரம், செயின், நெக்லஸ் என 14 பவுன் நகையை திருடினார். இதற்கிடையில் அந்த பஸ் எலவனாசூர்கோட்டை வந்த போது, அந்த 2 பெண்களும் கீழே இறங்கி சென்று விட்டனர்.

ரூ.4 லட்சம் திருட்டு

இதை அறியாத அருணாதேவி கடலூர் பஸ் நிலையம் வந்து, தனது பையை பார்த்தார். ஆனால் அவர் வைத்திருந்த 14 பவுன் நகையை காணவில்லை.  இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.  இதில் அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்