ஜவுளிக்கடையில் ரூ.18 லட்சம் கொள்ளை

ஜவுளிக்கடையில் ரூ.18 லட்சத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Update: 2021-11-02 17:32 GMT
காரைக்குடி, 

ஜவுளிக்கடையில் ரூ.18 லட்சத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

ரூ.18 லட்சம் கொள்ளை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்து, நள்ளிரவில்  கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. அதன்பின் கடை ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். 
இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் கடையை திறந்தபோது கடையின் மேல்தளத்தில் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று லாக்கரை பார்த்த போது அது உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ.18 லட்சத்து 37 ஆயிரத்தை காணவில்லை. கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்க்கலாம் என நினைத்த போது அங்கு டிஸ்க்குகளை காணவில்லை.  மர்ம ஆசாமிகள் கடையின் மேல்தளத்தில் புகுந்து லாக்கரை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்கிறார்கள். அதோடு கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் டிஸ்க்குகளையும் திருடிச் சென்றது தெரியவந்தது.

தேடுதல் வேட்டை

இதுகுறித்து கடையின் மேலாளர் அஜ்மல் அப்தான் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், காரைக்குடி துணை சூப்பிரண்டு வினோஜி ஆகியோர் விரைந்து சென்று மேல் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். 
24 மணி நேரமும் மக்கள் நடமாட்டமுள்ள நகரின் மையப்பகுதியில் இக் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது பரபரப்ைப ஏற்படுத்தியது. கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்