விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு
மேலூரில் வருகிற 7-ந்தேதி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர்.;
மேலூர்,
மேலூரில் வருகிற 7-ந்தேதி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
வதந்தி
மதுரை மாவட்டம் மேலூரில் முல்லை-பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் முருகன் தலைமையில் மூவேந்தர் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முல்லை பெரியாறு அணை நீர்மட்ட விவகாரத்தில் வதந்திகளை பரப்பும் கேரள அரசியல்வாதிகள் மற்றும் கேரள நடிகர்களை கண்டித்தும், தமிழக தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ள முல்லை பெரியாறு அணை நீர் உரிமையையும், நலனையும் பாதுகாக்க வேண்டி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கண்டனம்
இந்த கூட்டத்தில் 142 அடியாக அணையின் நீர்மட்டத்தை உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை மதிக்காமல் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் புறம்பாக தொடர்ந்து பொய் வதந்திகளை பரப்பும் கேரள அரசியல்வாதிகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முல்லைபெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மேலூரில் வருகிற 7-ந் தேதி மேலூரில் பஸ் நிலையம் அருகில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தீர்மானம்
முல்லை-பெரியாறு அணையை காக்க அடுத்தகட்டமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு, கேரளா செல்லும் வழிகளை முடக்குவது உள்ளிட்ட 8 தீர்மானங்களை விவசாய சங்கத்தினர் நிறைவேற்றினர். இந்த கூட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் மேலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகளும் கலந்துகொண்டனர்.