போலீஸ் ஏட்டுவுக்கு 7 ஆண்டு சிறை

வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்த வழக்கில், போலீஸ் ஏட்டுவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2021-11-02 17:16 GMT
தேனி: 


போலீஸ் ஏட்டு
தேனி மாவட்டம் வருசநாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவராஜா (வயது 38). இவர், திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக உள்ளார். அவருடைய மனைவி கிருபா. சிவராஜா கடந்த 2012-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரின் டிரைவராக பணியாற்றினார். 
அப்போது அவர், தனது மனைவியுடன் க.விலக்கில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்தார். இந்நிலையில் சிவராஜா தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தார். இதனால், கடந்த 2012-ம் ஆண்டு மனம் உடைந்த கிருபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தற்கொலைக்கு தூண்டுதல்
வரதட்சணை கொடுமையாலும், தற்கொலைக்கு தூண்டியதாலும் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதுகுறித்து சிவராஜா மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிருபாவின் தந்தை தங்கபாண்டி க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 
அதன்பேரில் சிவராஜா, அவருடைய தந்தை ராஜாங்கம், தாய் சுந்தரி, தம்பி அம்சராஜன் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிவராஜாவை போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரும் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த வழக்கு, தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
 
7 ஆண்டு சிறை
இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய ராஜாங்கம், அம்சராஜன் இறந்து விட்டனர். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி வெங்கடேசன் தீர்ப்பளித்தார். 
அதில், சிவராஜாவுக்கு, மனைவியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்கு 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைதண்டனையும், வரதட்சணை கொடுமை செய்த குற்றத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் இருந்து சுந்தரி விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து சிவராஜாவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்