தீபாவளி பண்டிகையை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவோம்-கிருஷ்ணகிரி கலெக்டர் வேண்டுகோள்
தீபாவளி பண்டிகையை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவோம்.;
தீபாவளி பண்டிகையை
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவோம்
கிருஷ்ணகிரி கலெக்டர் வேண்டுகோள்
கிருஷ்ணகிரி, நவ.3-
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசுகள் வெடிப்பது வழக்கம். இந்த பட்டாசுகளை வெடிப்பதால் நிலம், நீர், காற்று பெருமளவில் மாசுபடுகிறது. மேலும் பட்டாசுகளால் எழும் அதிக ஒலியால் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
எனவே நீதிமன்ற தீர்ப்பின்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகளை வெடிக்க நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், உடல் நல பாதிப்பு குறித்தும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல், பேணி காப்பது நமது கடமை எனவே தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடிட வேண்டும். பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் மாசற்ற தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.