1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து அரசியல் கட்சியினர் வரவேற்றனர்.
கிருஷ்ணகிரி:
பள்ளிகள் செயல்பட தொடங்கியது
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 19 மாதங்களாக பள்ளிகள் இயங்கவில்லை. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து வந்தன. இந்த நிலையில் கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை செயல்பட தொடங்கியது. பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் வரவேற்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான செங்குட்டுவன் தலைமை தாங்கி, மாணவிகளுக்கு மலர் கொத்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் நவாப், முன்னாள் நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், முன்னாள் கவுன்சிலர் அஸ்லம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேப்பனப்பள்ளி ஒன்றியம்
வேப்பனப்பள்ளி ஒன்றியம் கோடிப்பள்ளி நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.முருகன், மாணவர்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினார்.
மாணவர்கள் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிக்கு வந்து பாடம் பயின்று உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என அறிவுரை வழங்கினார். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரகுநாத், மாவட்ட பிரதிநிதி மாதேஸ்வரன், ஒன்றிய அவை தலைவர் கிருஷ்ணன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் முருகேசன், சதாசிவம், ஒன்றிய கவுன்சிலர் தனஞ்செயன், ஊராட்சி தலைவர்கள் சரவணன், சக்கரவர்த்தி, ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் முனிரத்தினம், பால்ராஜ், தொ.மு.ச. நிர்வாகி வெங்கடேசன், சின்ன பையன், வருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பர்கூர் ஒன்றியம்
பர்கூர் ஒன்றியம் சூரன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 20 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. இதையொட்டி மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். அவர்களை பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான சேகர் தலைமையில் நிர்வாகிகள் பூங்கொத்து, இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கும் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு முக கவசம் அணிவிக்கப்பட்டு பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ஊர்கவுண்டர் சீனிவாசன், கலைச்செல்வி, தலைமை ஆசிரியர் ஆஞ்சலின், உதவி ஆசிரியர் பாத்திமா, சுகுணா, சாந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பர்கூர் ஒன்றியம் வெண்ணாம்பள்ளி அரசினர் உயர்நிலைப்பள்ளி திறக்கப்பட்டது. இதையொட்டி பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சேகர் தலைமையில் பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முருகேசன், கவுன்சிலர் ரவி, பாலேப்பள்ளி ஊராட்சி வார்டு உறுப்பினர் வெங்கடேசன், பள்ளியின் தலைமை ஆசிரியர் நேசபிரபா, ஆசிரியர்கள் ராமசந்திரன், சகாய ஆரோக்கியராஜ், சிவகாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.