இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

தரமான முறையில் விற்பனை செய்யப்படுகிறதா? என்று விழுப்புரம் இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2021-11-02 17:11 GMT
விழுப்புரம், 

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு கடைகளில் தின்பண்டங்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இனிப்பு, காரம் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து ஏற்கனவே அவர்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இனிப்பு, கார விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்றும் எந்தவித கலப்படமும் இன்றி தரமான முறையிலும், சுகாதாரமான முறையிலும் இனிப்பு, கார வகைகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் விழுப்புரம் நகரில் உள்ள 40-க்கும் மேற்பட்ட இனிப்பு கடைகளில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஸ்டாலின் ராஜரத்தினம், பத்மநாபன், கொளஞ்சி, இளங்கோவன், மோகன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அறிவுரை

அப்போது இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும், விற்பனை செய்யும் இடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும், தயாரிப்பு, விற்பனைக்கான பாத்திரங்கள், இருப்பு கலன்களை தூய்மையாக கழுவி உபயோகப்படுத்த வேண்டும், தயாரிப்பு வளாகத்தினுள் ஈக்கள், பூச்சிகள் புகாத வகையில் தடையமைப்பு ஏற்படுத்த வேண்டும், உணவுப்பொருள் சமைக்கும், கையாளும் பணியாளர்கள் தன்சுத்தம் பராமரிக்க வேண்டும், இனிப்பு, கார வகைகள் தயாரிப்பில் சுத்தமான, பாதுகாப்பான குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும், தயாரிப்பு பகுதி இருட்டாக இருக்கக்கூடாது, வெற்றிலை, புகையிலை மெல்லுதல், புகை பிடித்தல், எச்சில் துப்புதல் இவை வளாகத்தின் எப்பகுதியிலும் அனுமதிக்கக்கூடாது, தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பணியாளர் உள்பட எவரையும் தயாரிப்பு வளாகத்தினுள் அனுமதிக்கக்கூடாது என்று அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வினியோகித்தனர்.
மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு பொருட்களை தயாரிக்கவோ, விற்பனை செய்வதோ சட்டப்படி குற்றமாகும், அதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். அதோடு இனிப்பு, கார வகைகளை வாங்கச்செல்லும் பொதுமக்கள், அந்த உணவுப்பொருட்கள் தயார் செய்யப்பட்ட தேதியை பார்த்தும், காலாவதியான பொருளா என்பதை நன்கு கவனமுடன் பார்த்து அதன் பிறகே வாங்க வேண்டும், அதுபோல் அதிக நிறமேற்றப்பட்ட திண்பண்டங்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்