தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-11-02 16:42 GMT

குண்டும் குழியுமான சாலை 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை ரேஸ்கோர்சில் உள்ள சாலை மாதிரிசாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சாலையில் தாமஸ் பார்க் வரை பழுதாகி குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற் பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே விபத்துகள் நடப்பதற்கு முன்பு இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.

  கந்தன், கோவை.

மயானத்தில் ஆக்கிரமிப்பு

  நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியில் 9, 10, 3 மற்றும் 11 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு பொதுமயானம் உள்ளது. அந்த மயானம் புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை எடுத்து உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மயானத்தில் ஆக்கிரமித்து உள்ள புதர்களை அகற்ற வேண்டும்.

  சதா, தேவாலா.

ஒழுகும் பஸ்சால் பயணிகள் அவதி

  கோவையில் இருந்து சாடிவயலுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பஸ்சின் மேற்கூரை பழுதானதால் ஓட்டையாக உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் பயணிகள் பஸ்சுக்குள்ளேயே குடைபிடித்து பயணிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மேற்கூரை ஓட்டைவிழுந்த பஸ்சை சரிசெய்ய வேண்டும்.

  ரன்வீர்வர்சன், காருண்யாநகர்.

பூங்கா இடம் ஆக்கிரமிப்பு

  கீரணத்தம் சாலையில் ஊராட்சியால் பூங்காவுக்கு என இடம் ஒதுக்கப்பட்டது. தற்போது அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து தற்காலிக கடைகள் வைத்து உள்ளனர். இந்த இடத்தை ஆக்கிரமிக்கக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்த பின்னரும் இதுபோன்ற சம்பவம் நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சரவணன், கீரணத்தம்.

பழுதான கழிவறை 

  வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை பஜார் பகுதியில் பொது கழிவறை கட்டப்பட்டது. ஆனால் இந்த கழிவறை கடந்த 2 ஆண்டுகளாக யாருக்கும் பயனில்லாமல் பூட்டியே இருக்கிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே அதிகாரிகள் இந்த கழிவறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

  கந்தன், வால்பாறை.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

  கோவை அருகே உள்ள டி.வி.எஸ்.நகர் ஸ்ரீ லட்சுமி நகரில் தற்போது பெய்த மழையால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். நடக்கக்கூட வழியில்லாமல் தண்ணீர் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றமும் வீசி வருகிறது. எனவே இங்கு தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

  ராஜூ, கோவை.

பஸ்வசதி வேண்டும்

  கணியூர் அருகே உள்ள மாப்பிள்ளை கவுண்டர் குட்டை பகுதியில் இருந்து பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு சோமனூர் அல்லது வரப்பாளையம்தான் செல்ல வேண்டும். ஆனால் இங்கு செல்ல எவ்வித பஸ்வசதியும் இல்லை. இதனால் 7 கி.மீ. தூரம் நடந்தோ அல்லது இருசக்கர வாகனங்களில் செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே இந்த பகுதிக்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

  பெரியசாமி, மாப்பிள்ளை கவுண்டர் குட்டை.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  கோவை செட்டிவீதி அசோக் நகரில் சாவித்திரி நகர், அபிராமி நகர் உள்ளது. இங்கு சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. ஆனால் அவை சுத்தம் செய்யப்படாததால் மலைபோன்று குவிந்து கிடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால், குப்பைகளில் மழைநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் நோய் பரவும் அபாய நிலையும் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.

  அசோக், செட்டிவீதி.

விபத்தை ஏற்படுத்தும் சாலை

  கோவை குறிச்சி காந்திஜி ரோடு பகுதியில் சாலை பழுதாகி படுமோசமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி படுகாயத்துடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. தற்போது மழை பெய்வதால் மழைநீர் தேங்கி நிற்பதால் குழிகள் இருப்பது தெரியவில்லை. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து சாலையை சரிசெய்ய வேண்டும்.

  காஜா உசேன், குறிச்சி.

  பொள்ளாச்சி புகார் பெட்டி செய்திக்கு

வாகன ஓட்டிகள் அவதி

  பொள்ளாச்சி உடுமலை ரோடு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. ஆனால் சாலை பணிகளை முறையாக மேற்கொள்ளாததால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் இதன் காரணமாக விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  நடராஜ், சின்னாபாளையம்.

பராமரிப்பு இல்லாத கழிப்பிடம்

  பொள்ளாச்சியில் பழைய மற்றும் புதிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பிடங்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசியதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். எனவே கழிப்பிடங்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை வேண்டும்.

  சுரேஷ், பொள்ளாச்சி

மேலும் செய்திகள்