3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
கடலூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. மேலும் குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
கடலூர்,
தமிழகத்தில் கடந்த 26-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்கிறது. இந்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் கடந்த 3 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட இருந்த நிலையில், கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை கடலோரம் மற்றும் தென் தமிழக பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் அரபிகடல் நோக்கி நகர்கிறது என்றும், அதனால் டெல்டா மாவட்டங்கள், கடலூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
குளம்போல் தேங்கியது
அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் பகலில் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை 3.30 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. பின்னர் அவ்வப்போது விட்டுவிட்டு கனமழை பெய்தது. மேலும் இரவு முதல் அதிகாலை வரை இடைவிடாது மழை தூறிக்கொண்டே இருந்தது.
இந்த மழையால் நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. மேலும் கடலூர் அண்ணாநகர் , எஸ்.எஸ்.பி. நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் சிரமங்களுக்கு மத்தியில் இடுப்பளவு உள்ள தண்ணீரில் நடந்து தான், சாலைக்கு வரவேண்டிய நிலை உள்ளது.
தடுப்பணைகள் நிரம்பின
மேலும் சிறுபாக்கம் பகுதியில் பெய்த கனமழையால் கிருஷ்ணாபுரம், நாங்கூர் வனப்பகுதிகளில் வறண்டு கிடந்த தடுப்பணைகள் அனைத்தும் தற்போது நிரம்பி வழிகின்றன. இதுதவிர வனப்பகுதியில் உள்ள கான்கிரீட் தொட்டிகளும் நிரம்பி விட்டன.
மூழ்கிய நெற்பயிர்கள்
இதேபோல் பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இதில் புதுச்சத்திரம் அருகே பூவாலை கிழக்கு, பூவாலை மேற்கு, வயலாமூர், வில்லியநல்லூர், புதுச்சத்திரம், சிலம்பிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்திருந்த சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
விளைநிலங்களில் பயிர்களே தெரியாத அளவிற்கு, மழைநீர் சூழ்ந்து குளம்போல் காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குறிஞ்சிப்பாடி அடுத்த ஆடுர்அகரம், கொத்தவாச்சேரி குண்டியமல்லூர் பகுதியில் நடவு செய்யப்பட்டு இருந்த சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளது.
இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கடலூரில் 12.5 செ.மீ. மழையும், குறைந்தபட்சமாக பெலாந்துறையில் 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.