போக்குவரத்து விதிமுறைகள் மீறல்: 19 ஆம்னி பஸ்களுக்கு ரூ.47 ஆயிரம் அபராதம்
போக்குவரத்து விதிமுறைகள் மீறல் தொடர்பாக 19 ஆம்னி பஸ்களுக்கு ரூ.47 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அடுத்துள்ள குறிஞ்சி நகர் சுங்கச்சாவடி அருகே தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், தரணிதர், ராஜ்குமார் ஆகியோர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 19 வெளிமாநில ஆம்னி பஸ்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது சம்பந்தப்பட்ட பஸ்களில் பயணித்த பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து கேட்டறிந்தனர். மேலும் போக்குவரத்து சாலை விதிமுறைகளை மீறி அதிக முகப்பு விளக்குகள் பயன்படுத்துதல் மற்றும் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 19 ஆம்னி பஸ்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.47 ஆயிரத்து 500 அபராத தொகை வசூலிக்கப்பட்டது. அதன்பிறகு பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பஸ்களை அதிகாரிகள் விடுவித்தனர்.