சுரண்டையில் பெண் திடீர் சாவு
சுரண்டையில் பெண் திடீரென இறந்து போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
சுரண்டை:
சுரண்டையில் பெண் திடீரென இறந்தார். அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நகைக்கடை
சுரண்டை பஸ்நிலைய ரோட்டில் நகைக்கடை நடத்தி வந்தவர் பெருமாள் (வயது 60). இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார். அதை தொடர்ந்து அவரது வளர்ப்பு மகள் மகாலட்சுமி என்ற மஞ்சு (21), அவரது கணவர் வசந்தகுமார் (25) ஆகியோர் நகைக்கடையை நிர்வாகம் செய்து வந்தனர்.
கடந்த மாதம் 29-ந் தேதி மஞ்சுவிற்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி சுரண்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சாவு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மஞ்சு திடீரென இறந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் பெருமாளின் உறவினர்கள் சுரண்டை போலீஸ் நிலையத்தில், மஞ்சுவின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் மனு கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து மஞ்சுவின் உடல் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மஞ்சுவுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் மட்டுமே ஆனதால், உதவி கலெக்டர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக மஞ்சுவின் உறவினர்கள், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்துள்ளனர்.