கல்லறை திருநாள் அனுசரிப்பு

தேனி மாவட்டம் முழுவதும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.

Update: 2021-11-02 15:53 GMT
தேனி: 


கல்லறை திருநாள்
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந்தேதி கல்லறை திருநாளாகவும், ஆத்மாக்களின் திருநாளாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டங்களுக்கு சென்று தங்கள் குடும்பத்தில் உயிரிழந்தவர்களின் கல்லறையை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து அஞ்சலி செலுத்துவதுடன் அவர்களின் ஆத்மாக்களுக்காக பிரார்த்தனை செய்வார்கள்.
அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் நேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர். தேனி அருகே பூதிப்புரம் சாலையோரம் உள்ள தேனி சி.எஸ்.ஐ. புனித பவுல் தேவாலயத்துக்கு உட்பட்ட கல்லறை தோட்டம் அலங்கரிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் ஆத்மாக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு கல்லறையில் மலர்தூவி பிரார்த்தனை செய்தனர்.

கம்பம்
இதேபோல் கம்பத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டத்தில் கல்லறைகள் சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி, ஊதுபத்தி ஏற்றி வைத்திருந்தனர். கம்பம் பங்குத்தந்தை செபாஸ்டின் டைட்டஸ் திருப்பலி நடத்தினார். அப்போது அவர் புனித நீரை கல்லறைகள் மீது தெளித்தார். 

ராயப்பன்பட்டியில் உள்ள கல்லறை தோட்டத்தில் பங்கு தந்தை ஜோசப் சிறப்பு திருப்பலி நடத்தினார். உத்தமபாளையம், கோம்பை, தேவாரம், அனுமந்தன்பட்டி, பெரியகுளம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கல்லறைகளில் கல்லறை திருநாள் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்