களையிழந்த அய்யலூர் ஆட்டுச்சந்தை

தொடர்மழை எதிரொலியாக அய்யலூர் ஆட்டுச்சந்தை களையிழந்தது. அங்கு திருட்டு ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த 3 பேர் சிக்கினர்.

Update: 2021-11-02 15:14 GMT
வடமதுரை:

தொடர்மழை எதிரொலி

வடமதுரை அருகே உள்ள அய்யலூரில், வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வார வியாழக்கிழமையன்று தீபாவளி பண்டிகை வருவதையொட்டி அய்யலூரில் நேற்று ஆட்டுச்சந்தை கூடியது.

 ஆனால் அதிகாலை முதலே அய்யலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதன் எதிரொலியாக சந்தைக்கு குறைந்த அளவே வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் விற்பனை மந்தமாகவே இருந்தது.

 களையிழந்த சந்தை

வழக்கமாக தீபாவளி பண்டிகையின் போது ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். ஆனால் நேற்று ஆள் நடமாட்டம் இன்றி சந்தை களையிழந்து காணப்பட்டது. மதியம் 12 மணி வரை நடைபெறும் சந்தை நேற்று 8 மணிக்கு முன்னரே முடிவடைந்தது.

ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.300 முதல் ரூ.350 வரையிலும், 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.4500 முதல் ரூ.5,500 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. கட்டு சேவல்கள் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. சேவல்களை சந்தையிலேயே சண்டையிட வைத்து பார்த்து வியாபாரிகள் வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.
 
 3 ேபருக்கு தர்ம அடி 

இதற்கிடையே கூட்டமே இல்லாமல் வெறிச்சோடிய அய்யலூர் சந்தைக்கு வாலிபர்கள் 3 பேர் ஆடுகளை மோட்டார் சைக்கிளில் விற்பனைக்கு கொண்டு வந்தனர். மேலும் இவர்களின் நடவடிக்கையில், வழக்கமாக சந்தைக்கு வருகிற வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதனையடுத்து அந்த வாலிபர்களிடம், எந்த ஊரில் இருந்து ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்? என்று விசாரித்தனர். அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். 

இதனால் ஆத்திரம் அடைந்த சந்தைக்கு வந்தவர்கள், 3 பேருக்கும் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர்கள், வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 

 கைது-பறிமுதல்

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்த கார்த்திக் (வயது 21), மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த மருதுபாண்டி (23), பழனி கணக்கன்பட்டியை சேர்ந்த தனுஷ்குமார் (19) என்று தெரியவந்தது. 

மேலும் இவர்கள் ஆடுகளை திருடி அய்யலூர் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 ஆடுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்