சுரண்டை அருகே தனியார் நிதிநிறுவன ஊழியர் குத்திக்கொலை செய்யப்பட்டார்

சுரண்டை அருகே தனியார் நிதிநிறுவன ஊழியர் குத்திக்கொலை செய்யப்பட்டார்

Update: 2021-11-02 15:07 GMT
சுரண்டை:
சுரண்டை அருகே பணம் வசூலிக்க சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தனியார் நிதி நிறுவன ஊழியர்
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே உள்ள ஆலடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் ராமசுப்பிரமணியன் (வயது 29). இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் பணம் வசூலிக்கும் மேலாளராக பணியாற்றி வந்தார். 
சுரண்டை அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் தொழிலாளி சண்முகநாதன் (45). இவரது மனைவி சண்முகத்தாய். இவர் ராமசுப்பிரமணியன் வேலை பார்க்கும் நிதி நிறுவனத்தில் மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கியதாகவும், அந்த கடனுக்கு பாக்கி தொகையை நீண்ட நாட்களாக கட்டாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
குத்திக்கொலை
இந்த நிலையில் ராமசுப்பிரமணியன் நேற்று காலையில் பணம் வசூலிப்பதற்காக சண்முகநாதன் வீட்டிற்கு சென்றார். ஆனால், பணம் கேட்டபோது தரமறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் ராமசுப்பிரமணியன் சுய உதவிக்குழு தலைவியை அழைத்து சென்று பணம் கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சண்முகநாதன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ராமசுப்பிரமணியனை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். ராமசுப்பிரமணியன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 
இதுகுறித்து உடனடியாக சாம்பவர்வடகரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமசுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சண்முகநாதனை பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட ராமசுப்பிரமணியனுக்கு திருமணமாகி மனைவியும், 2½ வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
சுரண்டை அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்