கிளன்ராக் வனப்பகுதியில் வெடிபொருட்களுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது

கிளன்ராக் வனப்பகுதியில் வெடிபொருட்களுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது

Update: 2021-11-02 14:50 GMT
பந்தலூர்

பந்தலூர் தாலுகா கேரளா மாநில எல்லையில் முண்டக்குன்னு, வைத்திரி, முத்தங்கா உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்களில் மாவோயிஸ்டுகள் அடிக்கடி புகுந்து விடுகின்றனர். அவர்கள் பொதுமக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்கின்றனர். 

இதனால் தமிழக-கேரள எல்லை வனப்பகுதியில் மாவோயிஸ்டு தடுப்பு பிரிவு போலீசாரும், அதிவிரைவு படையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்த நிலையில நேற்று முன்தினம் பந்தலூர் அருகே கிளன்ராக் வனப்பகுதியில் மாவோயிஸ்டு தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 

இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது, வெடிபொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை, தேவாலா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பந்தலூர் இரும்புபாலம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (வயது 33), நடராஜன் (55), ஜெயராமன் (63), சேரம்பாடி பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் (33) என்பதும் தெரியவந்தது. 

தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து,  அவர்களிடம் இருந்து ஜெலட்டின் டெட்டனேட்டர், பேட்டரி உள்ளிட்ட வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்