நெல்லையில் பள்ளிகளுக்கு ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகளை பறை அடித்து ஆசிரியைகள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்
நெல்லையில் பள்ளிகளுக்கு ஆர்வமுடன் வந்த மாணவமாணவிகளை பறை அடித்து ஆசிரியைகள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்
நெல்லை:
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர். பறையடித்து ஆசிரியைகள் வரவேற்றனர்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளையும் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி
அதன்படி நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பள்ளிகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் உற்சாகமாகவும், ஆர்வமுடனும் பள்ளிகளுக்கு வந்தனர். அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப நிலை சரிபார்க்கப்பட்டது. மேலும் வரிசையாக கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
பறை அடித்து வரவேற்பு
மேலும் பள்ளிகளுக்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரிய, ஆசிரியர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். இனிப்பு, ரோஜா பூக்கள் கொடுத்தும் வரவேற்றனர். பாளையங்கோட்டையில் ஒரு பள்ளியில் ஆசிரியைகள் பறை அடித்து, நடனமாடி வித்தியாசமாக மாணவிகளை வரவேற்றனர்.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் உள்ளிட்டோர் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள், நோட்டுகள் வழங்கி வரவேற்பு கொடுத்தனர்.
இதுகுறித்து 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கூறுகையில், ‘‘இதுவரை ஆன் லைன் முறையில் கல்வி கற்று வந்தோம். தற்போது மீண்டும் வகுப்புகளுக்கு வந்துள்ளோம். ஓராண்டு வகுப்பை நேரடியாக படிக்காமல், அடுத்த வகுப்புக்கு வந்து விட்டோம். தற்போது புதிய வகுப்பில் சேர்ந்து உள்ளோம். இருந்த போதிலும் பழைய நண்பர்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. பள்ளிக்கூட வளாகத்துக்குள் திரும்பி இருப்பது இனிமையாக உள்ளது’’ என்றனர்.
கலெக்டர் ஆய்வு
இதற்கிடையே நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு ரெட்டியார்பட்டி யூனியன் தொடக்கப்பள்ளி, ராமசுப்பு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை வரவேற்றார். இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-
தமிழக அரசு உத்தரவுப்படி நெல்லை மாவட்டம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். தமிழக அரசு விதித்துள்ள கொரோனா தொடர்பான வழிமுறைகளை அனைத்து பள்ளிக்கூட நிர்வாகங்களும் கடைபிடிக்க வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு உடல் நிலை பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இவை தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது. மழை காலம் என்பதால் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) வசந்தா, தலைமை ஆசிரியர்கள் சிவராஜ், ராமசாமி பால்ராஜ், யூனியன் துணைத்தலைவர் முரளிதரன், பஞ்சாயத்து தலைவர் வரதராஜன் மறறும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
மாநகராட்சி பள்ளி
நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு மாணவிகள் நேற்று காலை 8.30 மணி முதல் வந்தனர்.
அவர்களை தலைமை ஆசிரியை நாச்சியார் என்ற ஆனந்த பைரவி, உதவி தலைமை ஆசிரியர் குமார் ஜெயராஜ் மற்றும் ஆசிரியர்கள் பூங்கொத்து, இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.