ரூ.100 கோடி மாமூல் வழக்கில் முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் அமலாக்கத்துறை முன் திடீர் ஆஜர்
மாதம் ரூ.100 கோடி மாமூல் வழக்கில் அமலாக்கத்துறை சம்மனை ஏற்று அனில் தேஷ்முக் நேற்று திடீரென ஆஜரானார்.;
மும்பை,
மாதம் ரூ.100 கோடி மாமூல் வழக்கில் அமலாக்கத்துறை சம்மனை ஏற்று அனில் தேஷ்முக் நேற்று திடீரென ஆஜரானார்.
ரூ.100 கோடி மாமூல்
மும்பையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் அன்டிலா பங்களா அருகே காரில் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் ஊர்க்காவல் படைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் அவர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில், உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், மும்பை போலீசாரை பார் மற்றும் ஓட்டல்களில் இருந்து மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூல் செய்ய கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் மராட்டிய அரசியலில் பெரும் பூகம்பதை ஏற்படுத்தியது.
பண பரிமாற்ற மோசடி
இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ.க்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார். சி.பி.ஐ. விசாரணை அடிப்படையில் அமலாக்கத்துறையும் அனில் தேஷ்முக் மீது பண பரிமாற்ற மோசடி வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள வீடுகளில் அமலாகத்துறை சோதனை நடத்தியது. மேலும் அனில் தேஷ்முக்கின் தனி செயலாளர் சஞ்சீவ் பாலண்டே மற்றும் உதவியாளர் குந்தன் ஷிண்டே ஆகியோரை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அனில் தேஷ்முக்கிற்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பியது. குறைந்தது 4 முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராவதை தவிர்த்து வந்தார்.
மேலும் தனக்கு வழக்கப்பட்ட சம்மனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தநிலையில் 71 வயதான முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் நேற்று திடீரென அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.
ஆதாரமற்றது
முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நம்பகத்தன்மையோ, உண்மையோ, மரியாதையோ இல்லாத நபர்களின் சில சட்டவிரோத நலன்களுக்காக இந்த சூனிய வேட்டை தொடங்கப்பட்டது. அமலாக்கத்துறை முன்பு நான் ஆஜராவதை தவிர்க்கிறேன் அல்லது விரும்பவில்லை என்ற தவறாக கட்டுக்கதை மற்றும் எண்ணம் சிலரின் சொந்த நலன்களுக்காக உருவாக்கப்படுகிறது. சந்தேகமின்றி இத்தகைய பிரசாரம் முற்றிலும் ஆதாரமற்றது.
நான் எந்தவொரு பயமும், தயக்கமும் இல்லாத வெளிப்படையான, நியாயமான விசாரணையை மட்டுமே கோரினேன்.
பாரபட்சமற்ற அதிகாரிகள் முன்பு ஆஜராகி, என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் உள்ள பொய்களை அம்பலப்படுத்தவும், அமலாக்கத்துறை அதிகாரிகள் நியாயமான முறையில் நடந்துகொள்வார்கள் என்ற தீவிர நம்பிக்கையுடன் விசாரணையை நேருக்கு நேர் சந்திக்கவும் ஆர்வமாக உள்ளேன். விசாரணையில் எனது ஒத்துழைப்பு பற்றிய சந்தேகங்களை கைவிடுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.