19 மாதங்களுக்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் 250 விமானங்கள் இயக்கம்
19 மாதங்களுக்கு பிறகு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று 250 விமானங்கள் இயக்கப்பட்டன.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலை தாக்கம் தொடங்கியது. அப்போது மத்திய அரசு இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியதால் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் மே மாதம் உள்நாட்டு முனையங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதித்தது. ஆனால் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் 50 விமான சேவை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது கொரோனா 2-வது அலை தாக்கம் அதிகமானதால் மீண்டும் உள்நாட்டு விமான சேவை பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் 2-வது அலை குறைந்ததும் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டன. சென்னையில் இருந்து 25 நகரங்களுக்கு 100-ல் இருந்து 200 வரை விமான போக்குவரத்து அதிகரிக்கப்பட்டன.
இதற்கிடையில் 100 சதவீதம் உள்நாட்டு விமான சேவையை அதிகரிக்க கடந்த மாதம் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் கடந்த வாரம் 210 விமானங்கள் இயக்கப்பட்டு 25 ஆயிரம் பேர் பயணம் செய்தனர்.
250 விமான சேவை
இந்த நிலையில் 19 மாதங்களுக்கு பிறகு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், கோவை, மதுரை உள்பட 35 நகரங்களுக்கு 125 விமானங்களும், அந்த நகரங்களில் இருந்து சென்னைக்கும் என மொத்தம் 250 விமானங்கள் இயக்கப்பட்டன.
அதன்படி சென்னையில் இருந்து டெல்லி, மும்பைக்கு தலா 16 விமானங்களும், கொல்கத்தாவுக்கு 11 விமானங்களும், ஐதராபாத்துக்கு 10 விமானங்களும், பெங்களூருவுக்கு 9 விமானங்களும், கோவைக்கு 7 விமானங்களும், மதுரை, ஆமதாபாத் ஆகிய நகரங்களுக்கு தலா 4 விமானங்களும், தூத்துக்குடி, அந்தமான், விசாகப்பட்டினம், திருச்சி, கொச்சி, புனே, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்கு தலா 3 விமானங்களும், திருவனந்தபுரம், கவுகாத்தி, விஜயவாடா, ராஞ்சி, ராஜமுந்திரி ஆகிய நகரங்களுக்கு தலா 2 விமானங்களும், ஹூப்ளி, பாட்னா, கன்னூர், லக்னோ, மைசூர், ஜோத்பூர் உள்பட 15 நகரங்களுக்கு தலா 1 விமானங்களும் இயக்கப்பட்டன.
இதுபோல் 35 நகரங்களில் இருந்து விமானங்கள் சென்னைக்கு வந்தன. 19 மாதங்கள் கழித்து சென்னையில் நேற்று 250 விமான சேவைகள் இயக்கப்பட்டது. இதில் 23 ஆயிரம் பயணிகள் பயணம் செய்தனர். சென்னையில் இருந்து விமான சேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விரைவில் முழு விமான சேவைகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.