பாதையில் மழைநீர்
ஈரோடு சோலார் அம்மன் நகரில் கடந்த 3 வாரங்களாக பாதையிலேயே மழைநீர் தேங்கி நிற்கிறது. அதில் சாக்கடை கழிவுநீரும் கலந்துவிட்டது. சகதியாகிவிட்ட பாதையால் குப்பை வண்டிகளும், குப்பைகளை அள்ள வருவதில்லை. இதனால் அந்த பகுதியில் சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு குடியிருப்பவர்களால் பாதையில் நடந்து செல்லக்கூட முடியவில்லை. எனவே அம்மன் நகர் மக்களின் குறையை உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்க வேண்டும்.
பொதுமக்கள், அம்மன்நகர், சோலார்.
ஆபத்தான மின்கம்பம்
அந்தியூர் வேம்பத்தி கூலிவலசுவில் பள்ளிக்கூடத்துக்கு அருகே மின்கம்பம் உள்ளது. இதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வேம்பத்தி கூலிவலசு.
சாக்கடை கட்டப்படுமா?
வெள்ளித்திருப்பூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. ஆனால் இந்த பணியை முடிக்காமல் பாதியிலேயே விட்டு விட்டனர். அதனால் சாக்கடை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அவற்றை கட்டி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சொக்கலிங்கம், வெள்ளித்திருப்பூர்
தார்சாலை வேண்டும்
அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் மைக்கேல்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது கும்பரவாணி. இங்குள்ள விநாயகர் கோவிலில் இருந்து வனப்பகுதி வரை உள்ள மண் ரோடு பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே மண் சாலையை தார் சாலையாக மாற்றி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கும்பரவாணி
கழிவுநீர் குழாய் உடைப்பு
அந்தியூர் அருகே ஓசைபட்டியில் மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இங்கிருந்து கழிவுநீர் வெளியேறுவதற்காக போடப்பட்ட குழாய் உடைந்துள்ளது. இதனால் கழிவுநீர் அப்பகுதியில் குட்டை போல் தேங்கி வருகிறது. சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி உடனே கழிவுநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓ.எஸ்.ஆறுமுகம், ஓசைபட்டி
மின்விளக்கு ஒளிரவில்லை
இக்கரை நெகமம் ஊராட்சிக்கு உள்பட்ட 8-வது வார்டில், ஆண்கள், பெண்களுக்கு பொது கழிப்பிடம் உள்ளது. இதில் ஆண்கள் கழிப்பறையில் உள்ள மின் விளக்கு ஒளிரவில்லை. இரவு நேரங்களில் கழிப்பறைக்கு செல்ல அச்சமாக உள்ளது. உடனே மின்விளக்கை ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அய்யாசாமி, கெஞ்சனூர்.
ரோடு வசதி
பெருந்துறை பழைய பஸ் நிலையத்தில் இருந்து போலீஸ் நிலையம் வரை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. சில நாட்கள் இந்த பணி நடந்தது. அதன்பின்னர் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். நிறுத்தப்பட்ட ரோடு போடும் பணியை உடனே தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், பெருந்துறை
சாயும் நிலையில் மின்கம்பம்
ஊஞ்சலூர் அருகே உள்ள கருவேலம்பாளையத்தில் ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் 2 மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து சாயும் நிலையில் உள்ளது. எலும்புக்கூடாக உள்ள இந்த மின்கம்பங்களில் மின்வாரிய ஊழியர்கள் பழுது நீக்க கூட ஏறமுடியாது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் சாயும் நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
கே.பி.கனகவேல், நஞ்சை கொளாநல்லி