1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: பேண்டு வாத்தியம் முழங்க மாணவ-மாணவிகளுக்கு வரவேற்பு

1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. பேண்டு வாத்தியம் முழங்க மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2021-11-02 00:13 GMT
ஈரோடு
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. பேண்டு வாத்தியம் முழங்க மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 
முதல்-அமைச்சர் அறிவிப்பு
கொரோனா பெருந்தொற்றால் உலகம் பல பாதிப்புகளை சந்தித்தது. அதில் மாணவ-மாணவிகளின் கல்வியும் ஒன்று. தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக பள்ளி, கல்லூரி மூடப்பட்டன. ஆன்லைன் பாடங்கள் நடத்தப்பட்டன. ஆனாலும் அது மாணவ-மாணவிகளுக்கு முழு பயனை தரவில்லை. இதற்கிடையே நோய் தொற்று ஓரளவு குறைந்ததால் பல்வேறு நெறிமுறைகளுடன் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி முதல் கல்லூரிகள், 9, 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இந்தநிலையில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்ததால், நவம்பர் 1-ந் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளை விருந்தினர்களை போல் ஆசிரியர்கள் வரவேற்க வேண்டும். இதில் எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். 
உற்சாகமாக வந்தனர்
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இதற்காக முன்கூட்டியே வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இருந்தது. சில பள்ளிக்கூடங்களின் வாயிலில் வாழைமரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. 
ஆசிரிய-ஆசிரியைகள் கிருமி நாசினி, வெப்ப சோதனை கருவிகளுடன் பள்ளி வாசலில் மாணவ-மாணவிகளுக்ககாக காத்திருந்தார்கள். மாணவ-மாணவிகள் உற்சாகமாக வருவதை பார்த்து, அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து, கைகளுக்கு கிருமி நாசினி கொடுத்து அன்போடு வகுப்பறைக்கு அழைத்து சென்றார்கள். முதல்நாள் பாடம் ஏதும் நடைபெறவில்லை. மாணவ-மாணவிகளை மகிழ்ச்சியூட்டும் வகையில் கதை, பாடல், கவிதைகள் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சுமார் 19 மாதங்களுக்கு பிறகு தாங்கள் படித்த வகுப்பறைகளை பார்த்ததாலும், தன்னுடைய நண்பர்களை பார்த்ததாலும் உற்சாகத்தில் திளைத்தார்கள். 
அந்தியூர்
அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பானுமதி தலைமையில் ஆசிரிய-ஆசிரியைகள் மாணவர்களை வரவேற்றனர். அப்போது ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, பூங்கொத்துகள் கொடுத்தார். 
இதேபோல் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தவிட்டுபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி, அந்தியூர் அரசு நடுநிலைப்பள்ளி, புதுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, சங்கராப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி. செல்லம்பாளையம் மாதிரி பள்ளி, செல்லம்பாளையம் நடுநிலைப்பள்ளி,. எண்ணமங்கலம் நடுநிலைப்பள்ளி. அத்தாணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கீழ்வாணி அரசு மேல்நிலைப்பள்ளி, ஆப்பக்கூடல் புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு, பூங்கொத்து மற்றும் நோட்டுகள் வழங்கி வரவேற்றார். 
அந்தியூர்  ஓசைபட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளர் முருகன் இனிப்புகள் கொடுத்து, பூங்கொத்து வழங்கி வரவேற்றாா். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்-ஆசிரியைகள் மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டார்கள்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அடுத்துள்ள கோணமூலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கே.சி.பி.இளங்கோவன், ஊராட்சித் தலைவர் செந்தில்நாதன், துணைத் தலைவர் ஜெகதீசன் ஆகியோர் இனிப்பு வழங்கி வரவேற்றார்கள்.
கோபி
கோபி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோபி வைரவிழா மேல்நிலை பள்ளி, நகராட்சி ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கோபி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரிய-ஆசிரியைகள் வாசலில் நின்று விருந்தினர்களை வரவேற்றது போல் வரவேற்று சென்றனர். 
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கியது. உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 
மொடக்குறிச்சி அடுத்த மின்னப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து வகுப்பறைக்கு சென்றார்கள். முன்னதாக அவர்களுக்கு பள்ளியின் வாயிலிலேயே உடல் வெப்பநிலை சரிபார்க்கப்பட்டது.
 பெருந்துறை
பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் சீனாபுரம் அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் நேற்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. காலையிலேயே உற்சாகமாக வந்த குழந்தைகளுக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க ஆசிரிய-ஆசிரியைகள் பூக்கள், பலூன்கள் கொடுத்து வரவேற்றனர். பள்ளியின் நுழைவு வாயிலில் வாழை மரம் கட்டப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் சீனாபுரம் ஊராட்சி தலைவி சுதா, முன்னாள் ஊராட்சி தலைவர் பி.சி.சுப்பிரமணியம், தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.   
கொடுமுடி
கொடுமுடி எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி, அண்ணா நகர் மேல்நிலைப்பள்ளி, தாமரை பாளையம் மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி சீதாலட்சுமி ஆரம்ப தொடக்கப்பள்ளி, ஆவுடையார் பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சோளிபாளையம் கலைவாணி கல்வி நிலையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள், அரசு உதவிபெறும் அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.  
சத்தியமங்கலம் 
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு தி.மு.க. நகர இளைஞரணி சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. சத்தி நகர தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.ஜானகிராமசாமி இனிப்புகள் வழங்கினார். சத்தியமங்கலம் நகர இளைஞரணி ஸ்ரீராம் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். 
இதேபோல் சத்தி பெரியூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை அரியப்பம்பாளையம் பேரூர் தி.மு.க. செயலாளர் வக்கீல் செந்தில்நாதன் ரோஜாப்பூ மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றார். 
இந்த நிகழ்ச்சியில் அரியப்பம்பாளையம் பேரூர் வார்டு உறுப்பினர்கள் ராஜேந்திரன், துரைசாமி, தங்கவேல், ஜெயராஜ், இளைஞரணி அமைப்பாளர் பிரசாத், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டார்கள். 
சென்னிமலை
சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளை வரவேற்கும் வகையில் பள்ளியின் முன்பு வாழை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. பின்னர் பள்ளிக்குழு செயலாளர் ஓ.எம்.ஏ.கிருஷ்ணமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் என்.ஆறுமுகம் மேற்பார்வையில் ஆசிரியர்-ஆசிரியைகள் மேளதாளங்கள் முழங்க மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் வகுப்பறைகளுக்கு சென்றனர். நேற்று காலை பெற்றோர்கள் மழையில் நனைந்தபடியே தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர். 
அம்மாபேட்டை
 அம்மாபேட்டை அரசு உதவி பெறும் பெரியசாமி நடுநிலைப்பள்ளியில்  முன்னாள் எம்பி.யும், பள்ளி கல்விக்குழு தலைவருமான என்.ஆர்.கோவிந்தராஜர் குழந்தைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கி வரவேற்றார்.
முன்னதாக பள்ளி குழந்தைகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து சானிடைசர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை வனிதாமணி ஆரத்தி எடுத்து குழந்தைகளை வரவேற்றார். உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் இதில் கலந்துகொண்டார்கள். 
இதேபோல் குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுகமணி வேல்முருகன் பூங்கொத்து கொடுத்து இனிப்புகள் வழங்கி மாணவ-மாணவிகளை அனைவரையும் வரவேற்றார்.
இந்தநிகழ்ச்சியில் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முனுசாமி, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் டேனியல் சுந்தர்ராஜ், அம்மாபேட்டை ஒன்றிய தி.மு.க.  முன்னாள் அவைத்தலைவர் கந்தசாமி, நிர்வாகிகள் சங்கர், முருகன், அர்ஜூனன், தனசேகரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டார்கள். 
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளை மலர் தூவி வரவேற்று வகுப்பறைக்கு அழைத்து சென்றார்கள். இதில் தலைமை ஆசிரியர் சேகர், கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு குழு செயலாளர் பி.விஸ்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டார்கள். 

மேலும் செய்திகள்