பசுமாட்டை அடித்து கொன்ற புலி; கிராம மக்கள் பீதி
உன்சூர் அருகே பசுமாட்டை புலி அடித்து கொன்றது. இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
மைசூரு: உன்சூர் அருகே பசுமாட்டை புலி அடித்து கொன்றது. இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
பசுமாட்டை அடித்து கொன்றது
மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா நேரலேகுப்பே அருகே அப்பனக்குப்பே கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியை ஓட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் இரைதேடி கிராமத்திற்குள் புகுந்து ஆடு, மாடுகளை அடித்து கொன்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அதேகிராமத்தை சேர்ந்த விவசாயி உதயன், தனது பசுமாட்டை தோட்டத்தில் மேய்வதற்காக கட்டிப்போட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார். இந்த சந்தர்ப்பத்தில் வனப்பகுதியில் இருந்து புலி ஒன்று இரைதேடி அப்பனகுப்பே கிராமத்திற்குள் புகுந்தது. அந்த புலி, விவசாயி உதயனின் தோட்டத்திற்கு நுழைந்து அங்கு கட்டிப்போட்டிருந்த பசுமாட்டை அடித்து கொன்றது. பின்னர் பசுமாட்டின் பாதி இறைச்சியை தின்றுவிட்டு புலி வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டது.
கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்
இதற்கிடையே மாலையில் தோட்டத்துக்கு வந்து பார்த்த உதயன் ரத்த காயங்களுடன் பசுமாடு செத்துக்கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அவர், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்து பசுமாட்டையும், அங்கிருந்த கால்தடத்தையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அதில் பசுமாட்டை புலி அடித்து கொன்றது உறுதியானது.
இந்த சந்தர்ப்பத்தில் கிராம மக்கள், வனத்துறையினரிடம் கிராமத்தில் புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அட்டகாசம் அதிகமாக இருந்து வருகிறது. விவசாயிகளின் கால்நடைகளை அடித்து கொன்று வருகிறது. ஆகையால் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர். ஆனாலும் கிராம மக்கள் புலி பீதியில் இருந்து வருகின்றனர்.