பட்டாசு கடைகளில் வருவாய்த்துறையினர் 2-வது நாளாக ஆய்வு
சிவகாசியில் பட்டாசு கடைகளில் வருவாய்த்துறையினர் 2-வது நாளாக ஆய்வு செய்தனர்.
சிவகாசி,
தடை செய்யப்பட்ட பேரியம் வேதி பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகள் உற்பத்தி செய்யக்கூடாது என்றும், சரவெடிகள் உற்பத்தி செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் சிவகாசி தாலுகா பகுதியில் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று வருவாய்த்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். தாசில்தார்கள் ராஜ்குமார், ஆனந்தராஜ் தலைமையில் தனித்தனி குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தாசில்தார் ராஜ்குமார் கூறியதாவது:- மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் 2 -வது நாளாக பட்டாசு கடைகளில் சோதனை நடத்தினோம். இதில் ரூ 70 ஆயிரம் மதிப்புள்ள சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனைக்கு பயந்து சிலர் கடைகளை மூடி விட்டு சென்றனர். அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து கடைகளை திறந்து ஆய்வு செய்தோம். அதில் விதி மீறல்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் கடைகளை உரிமையாளர்களே பூட்டி விட்டு சென்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.