ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் மேகநாத ரெட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிபிரதிநிதிகள் முன்னிலையில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

Update: 2021-11-01 21:06 GMT
விருதுநகர், 
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் மேகநாத ரெட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிபிரதிநிதிகள் முன்னிலையில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
வரைவு வாக்காளர் பட்டியல் 
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் 1-1-2022-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 1-11- 2021 முதல் நடைபெற உள்ளதால் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டார். 
 வரைவு வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 16 லட்சத்து 71 ஆயிரத்து 963 ஆகும். ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 13 ஆயிரத்து 839. பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 57 ஆயிரத்து 931. இதர வாக்காளர்கள் 193. கடந்த 19-3-2021-ந் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை விட 967 வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
19.3.2021 முதல் 18-10-2021 நடைபெற்ற சுருக்க திருத்ததில் புதிதாக 4,070 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த, இறந்த வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவு ஆகியவற்றின் படி 3,103 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
 7 தொகுதிகளிலும் 8 லட்சத்து 13 ஆயிரத்து 839 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 57 ஆயிரத்து 931 பெண் வாக்காளர்களும், 193 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 16 லட்சத்து 71 ஆயிரத்து 963 வாக்காளர்கள் உள்ளனர்.
சிறப்பு முகாம்
 1-1-2022-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு நடைபெற உள்ள சிறப்பு சுருக்க திருத்ததில் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் செய்ய 1-11-2021 முதல் 30-11-2021 வரை விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் வட்ட, கோட்ட, நகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் விசாரணைக்கு பின் முடிவு செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் 5-1-2022 வெளியிடப்படும்.
 விண்ணப்பங்கள் பெறுவதற்கான  சிறப்பு முகாம் 13-11- 2021, 14-11-2021, 27-11-2021, 28-11-2021 ஆகிய நாட்களில் நடைபெறும். இணையதளம் அல்லாத வழியில் விண்ணப்பங்கள் அனுப்ப விரும்பும் வாக்காளர்கள் கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பதிவு அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடத்தில் அனைத்து படிவங்களும் உள்ளன அல்லது இணையதளம்மூலம் படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
இணைய தளம் 
 விண்ணப்பத்துடன் புகைப்படத்துடன் கூடிய வயது சான்றிதழ், முகவரி தொடர்புடைய சான்றுகளை இணைத்து வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகம், வாக்குச்சாவடி நிலைய அலுவலர் ஆகியோரிடம் அளிக்கலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இணையதள முகவரியில் தேசிய வாக்காளர் சேவை தளத்திற்குச் சென்று இணையவழியில் விண்ணப்பிக்க அதற்கான இணைப்பினை அழுத்த வேண்டும்.
 அதில் படிவம் 6-ல் முகவரி உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து புகைப்படம், வயது, வீட்டு முகவரிக்கான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலில் ஏதேனும் மாற்றம், திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் பதிவுகள் திருத்தம் என்ற இணைப்பில் சென்று படிவம் 8 ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் படிவம் 6 ஏ மூலம் தங்கள் பெயரினை சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர் உதவி செயலி மூலமும், தொலைபேசி மூலமும் விண்ணப்பம் செய்யலாம். 1-1-2022 அன்ற 18 வயதினை பூர்த்தி செய்யும் இளம் வாக்காளர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்க விரும்பும் நபர்கள் திருத்தம் மற்றும் நீக்கம் செய்ய அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் மேகநாதரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்