மேலூரில் களைகட்டிய சந்தை; ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி மேலூரில் நடந்த ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது.
மேலூர்
தீபாவளி பண்டிகையையொட்டி மேலூரில் நடந்த ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது.
ஆட்டுச்சந்தை
மதுரை மாவட்டம் மேலூரில் ஆட்டுச்சந்தை உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமையன்று ஆடு, மாடு, கோழி ஆகிய வற்றுக்கான சந்தைகள் நடைபெறுவது உண்டு. மேலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் தங்கள் கால்நடைகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். ஆடுகளை வாங்குவதற்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வருவார்கள். இதனால் எப்போதும் மேலூர் கால்நடை சந்தையானது களைகட்டி இருக்கும்.
தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி ஏராளமான விவசாயிகள் தங்கள் ஆடு, மாடு, மற்றும் கோழிகளை விற்பனைக்காக நேற்று கொண்டு வந்தனர். இதனை வாங்குவதற்காக ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் ஏராளமானோர் குவிந்தனர். 3000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை ஆடுகள் விலை போனது.
ரூ.2 கோடிக்கு விற்பனை
இதன் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் வியாபாரம் நடைபெற்றுள்ளது. விற்பனைக்கு ஆடுகளை கொண்டு வந்திருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகளை விற்று தீபாவளி பண்டிகைக்கு தங்களுக்கு வேண்டிய பல்வேறு பொருட்களை மகிழ்ச்சியாக வாங்கி சென்றனர்.
நேற்று காலை முதல் மழை பெய்து கொண்டிருந்ததால் கொட்டும் மழையிலும் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.
விற்பனைக்காக ஆடுகளை கொண்டு வந்து இறக்கியும் அங்கிருந்து வாங்கியதை வாகனங்களில் ஏற்றி செல்ல ஏராளமான வேன்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.