10 தொகுதிகளில் 26 லட்சத்து 81 ஆயிரம் வாக்காளர்கள்
10 தொகுதிகளில் 26 லட்சத்து 81 ஆயிரம் வாக்காளர்கள்
மதுரை
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன. அதில் மொத்தம் 26 லட்சத்து 81 ஆயிரத்து 727 வாக்காளர்கள் உள்ளனர்.
கலெக்டர் வெளியிட்டார்
இந்தியத் தேர்தல் ஆணையம், 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியினை மேற்கொண்டு உள்ளது. அதற்கு முன்னோட்டமாக தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டன. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் அனிஷ்சேகர் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த சட்டசபை தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 26 லட்சத்து 97 ஆயிரத்து 682 வாக்காளர்கள் இருந்தனர். அதில் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இறப்பு, இடமாற்றம் போன்ற காரணங்களால் 25 ஆயிரத்து 415 பேர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். புதிதாக 9 ஆயிரத்து 460 பேர் சேர்க்கப்பட்டனர். அதன்படி மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் தற்போது 26 லட்சத்து 81 ஆயிரத்து 727 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 13 லட்சத்து 17 ஆயிரத்து 631 பேர். பெண்கள் 13 லட்சத்து 63 ஆயிரத்து 897 பேர். திருநங்கைகள் 199 பேர்.
இணையதளம்
இந்த பட்டியலில் பெயரை சேர்க்கவும், திருத்தம் செய்யவும் மனு அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் புதிதாக பதிவு செய்வதற்கு மற்றும் ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம்-6, இந்திய கடவுச்சீட்டு வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பதிவு செய்வதற்கு படிவம்-6ஏ பூர்த்தி செய்து தர வேண்டும். ஏற்கனவே பதிவு செய்துள்ள பெயரினை நீக்கம் செய்வதற்கு அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் சேர்ப்பு குறித்து ஆட்சேபணை தெரிவிக்க படிவம்-7, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை மாற்றம் அல்லது திருத்தம் செய்வதற்கு படிவம்-8, ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம் 8ஏ-ல் விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.
2022-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அல்லது அதற்கு முன்பே 18 வயது பூர்த்தி அடைந்தவர் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதற்கு வருகிற 30-ந் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து நேரடியாக அளிக்கலாம் அல்லது www.NVSP.IN என்ற இணையதள முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம். கைப்பேசியில் வாக்காளர் உதவி எண் என்ற செயலி Voters Helpline Mobile App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.