சட்டவிரோதமாக மது விற்றவரை கைது செய்யக்கோரி கிராம மக்கள் மறியல்

சட்டவிரோதமாக மது விற்றவரை கைது செய்யக்கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2021-11-01 20:41 GMT
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள விழுதுடையான் கிராமத்தில் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக ஒருவர் விற்று வருவதாக கூறி, அதை கண்டித்து விழுதுடையான் கிராம மக்கள் ஆண்டிமடம்- விருத்தாச்சலம் சாலை பெரியாத்துகுறிச்சி கிராமம் அருகே உள்ள செக்போஸ்ட் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த பெரியாத்துகுறிச்சி கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், தாசில்தார் முத்துகிருஷ்ணன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்து, மது விற்பனை செய்பவரை கைது செய்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம், என்றனர். அவரை கைது செய்வதாக இன்ஸ்பெக்டர் உறுதி அளித்ததன்பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் விழுதுடையான் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், அதே ஊரை சேர்ந்த சின்னதுரை என்பவர் மது விற்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மறியலால் ஆண்டிமடம்-விருத்தாசலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்