அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் வந்த அதிகாரிகளை தி.மு.க.வினர் முற்றுகை

அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் வந்த அதிகாரிகளை தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர்.

Update: 2021-11-01 20:41 GMT
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே விளாங்குடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இப்பகுதியில் உள்ளவர்கள் நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில் 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் விளாங்குடியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைகளை ஆய்வு செய்ய திருச்சியில் இருந்து அரசு அதிகாரிகள் ராஜ்குமார், நாகராஜ் மற்றும் நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் ரெயிலில் அரியலூர் வந்தனர். அவர்களை துணைத் தலைவர் சாமிநாதன் அவரது அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் விளாங்குடிக்கு அழைத்து வந்துள்ளார். இதனை கண்ட தி.மு.க.வினர் மற்றும் விவசாயிகள் அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் எப்படி வரலாம் என்று கேட்டு அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டனர். மேலும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மற்றும் இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை பயிர்க்கடன் எத்தனை நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் காண்பிக்க வேண்டும் என்று தி.மு.க.வினர் மற்றும் விவசாயிகள் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். மேலும் விவசாயிகள் கூறுகையில், வேண்டியவர்கள் மற்றும் வேண்டாதவர்கள் என 2 பிரிவாக பிரித்து கடன் வழங்குகின்றனர். கந்து வட்டிக்கு பயந்து தான் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்குகின்றனர். ஆவணங்கள் முறையாக இருந்தும் 5 மாத காலமாக கடன் தராமல் இழுத்தடித்து வருகின்றனர், என்றனர். மேலும் முறையாக பயிர்க்கடன் வழங்கவில்லை என்றால் தீபாவளி முடிந்தபின்னர், சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று தி.மு.க.வினர் மற்றும் விவசாயிகள் எச்சரித்துச் சென்றனர்.

மேலும் செய்திகள்