தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-11-01 20:37 GMT
போக்குவரத்து நெரிசல்
தர்மபுரி நகரில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப சாலை விரிவாக்க பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தர்மபுரி கடைவீதி பகுதியில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிக சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனிராஜ், தர்மபுரி.
மின்விளக்கு வசதி தேவை
எடப்பாடியில் கனியம்பட்டி கிராம பகுதியில் உயர்கோபுரமின்விளக்கு கடந்த 3 ஆண்டுகளாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அங்கு விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. இதன்காரணமாக அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றசம்பவங்கள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்ய வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், கனியாம்பட்டி, எடப்பாடி.
பஸ் வசதி தேவை
வெண்ணந்தூரில் இருந்து நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் செல்ல 4 பஸ்கள் மாறி வரவேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்கு நாமக்கல் கலெக்டர் அலுவலகம் செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் ராசிபுரத்தில் இருந்து இளம்பிள்ளைக்கு அதிக அளவில் பஸ்கள் சென்று வருகின்றன. அந்த பஸ்களை வெண்ணந்தூர் வழியாக செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.
நாய்கள் தொல்லை
சேலம் மாநகராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டி விரட்டி கடிக்கிறது. நாய்களை கண்டு பயந்து சாலையில் தவறி விழுகின்றனர். இதனால் அவர்களுக்கு காயம் ஏற்படுகிறது. அதிலும் இரவு நேரங்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.கந்தசாமி,, சேலம்.
கலெக்டர் அலுவலகம் அருகில் தேங்கும் மழைநீர்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் இடதுபுறம் பிரட்ஸ் ரோடு உள்ளது. இந்த சாலையில் கலெக்டர் அலுவலகத்தையொட்டி மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. அந்த பகுதியில் சாலை பள்ளமாக உள்ளதால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் அங்கேயே தேங்கி கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் அந்த வழியாக நடந்து செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே இந்த பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க சாலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்.சிவா, செவ்வாய்பேட்டை, சேலம்.
சாக்கடை கால்வாய் வசதி
சேலம் மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட மணக்காடு ராஜகணபதி நகரில் போதுமான கால்வாய் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் அந்த பகுதியில் தண்ணீர் அதிக அளவு தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். தேங்கி கிடக்கும் நீரால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகளின் நடாமட்டம் உள்ளது. எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.நதியா, ராஜகணபதிநகர், சேலம்.
குப்பை கூளமாக மாறும் நதி
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி பகுதியில் வசிஷ்ட நதியில் கழிவுநீர் கலப்பதுடன், குப்பை, இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டுகின்றனர். இதனால் விசிஷ்ட நதி குப்பை கூளமாக மாறி வருகிறது. மழைக்காலங்களில் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி நிற்கிறது. மேலும் கழிவுகள் அனைத்தும் நதியில் கலந்து விடுவதால் நதிநீர் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் அதிகமாக அடிக்கிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இது பற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நகராட்சி அதிகாரிகள் உடனடியாக இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.துரைராஜ், ஆத்தூர்.

மேலும் செய்திகள்