தொற்றுநோய் பரவும் அபாயம்
கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு ஒற்றையால்விளை நடுத்தெருவில் சாலையோரம் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையின் மீது அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து காணப்படுகிறது. ஓடையை சரியாக பராமரிக்காததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையை தூர்வாரி சேதமடைந்த சிலாப்புகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அர்ஜூன், ஒற்றையால்விளை.
சாலை சீரமைக்கப்படுமா?
நாகர்கோவில் இளங்கடையில் இருந்து வட்டவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக பல மாதங்களாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அப்துல் கரீம்,
மாலிக் தினார் நகர்.
வடிகால் ஓடை தேவை
நாகர்கோவில் ராணித்தோட்டம் தடி டிப்போ சாலை கோல்டன் தெரு உள்ளது. இந்த தெருவில் வடிகால் ஓடை அமைக்கப்படாததால் சாலையில் மழைநீர் தேங்கி பல நாட்கள் ஆகியும் வடியாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, அதிகாரிகள் சாலையை சீரமைத்து வடிகால் ஓடை அமைக்க நடவடிக்க எடுக்க வேண்டும்.
-ஜெகன் ராஜ், ராணிதோட்டம்.
விபத்து அபாயம்
டெரிக் சந்திப்பில் இருந்து ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முதல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி வரை சாலையின் ஒரு பகுதியில் பள்ளம் தோட்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. தற்போது, அவை முறையாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், ஆசாரிபள்ளத்துக்கு நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்சு வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.
மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும்
பள்ளியாடி மின் அலுவலகத்துக்கு உட்பட்ட குழிக்கோடு பகுதியில் இருந்து வெள்ளிகோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பள்ளி வாகனங்கள் செல்கின்றன. இந்த பகுதியில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. கனரக வானங்கள் செல்லும்போது அதில் உரசி மின் விபத்து காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும்.
-வினுஆன்டோ, கூத்தன்கோடுவிளை.
இடையூறான மின்கம்பம்
வெள்ளிமலை பேரூராட்சிக்குட்பட்ட மணலிவிளையில் இருந்து பத்மநாபன்தோப்பு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உயர் அழுத்த மின்சாரம் செல்லும் 3 மின் கம்பங்கள் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்றி சாலையோரம் அமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-எ.எம்.ரமேஷ், அம்மாண்டிவிளை.