1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன
புதுக்கோட்டை
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த பின் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,610 பள்ளிகள் 19 மாதத்திற்கு பிறகு நேற்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின. இதேபோல உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர்.
குடையுடன் வந்த மாணவர்கள்
புதுக்கோட்டையில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலையில் சாரல் மழை பெய்தப்படி இருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு ஆர்வமாக வந்தனர். சில மாணவ-மாணவிகள் மழையில் நனையாமல் இருக்க குடையை பிடித்தபடி பள்ளிக்கு வந்தனர். பெற்றோரும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு இரு சக்கர வாகனம் மற்றும் சைக்கிளில் கொண்டு வந்து விட்டு சென்றனர். சில மாணவ-மாணவிகள் ஆட்டோ, வேன் மற்றும் பஸ்களிலும், சைக்கிளிலும் பள்ளிக்கு வந்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தோளில் புத்தக பையை சுமந்து கொண்டும், கையில் டிபன் பாக்ஸ் பையை தூக்கியபடி சீருடையில் மகிழ்ச்சியாய் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததை காண முடிந்தது. மாணவ-மாணவிகளை இன்முகத்தோடு ஆசிரியர்கள் வரவேற்றனர். புதுக்கோட்டை சந்தைபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள், புத்தகங்கள் வழங்கி தலைமை ஆசிரியர் விஜயமாணிக்கம் தலைமையில் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் வரவேற்றனர்.
பரிசு பொருட்கள்
இதேபோல அரசு உயர் துவக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பூ, சாக்லெட், கடலை உருண்டை மிட்டாய் கொடுத்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் வரவேற்றனர். ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு ரோஜா பூ, இனிப்பு கொடுத்தும், பேனா, பென்சில் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கி தலைமை ஆசிரியை தமிழரசி தலைமையில் ஆசிரியர்கள் வரவேற்றனர்.
பெரும்பாலான மாணவ-மாணவிகள் முக கவசம் அணிந்து, சீருடை அணிந்து உற்சாகமாய் பள்ளிக்கு வந்தனர். பள்ளி நுழைவு வாயிலில் மாணவ-மாணவிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கினர். நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வந்ததால் வகுப்பறையில் உற்சாகமாய் இருந்தனர். சக மாணவ-மாணவிகள், நண்பர்களை பார்த்து நலம் விசாரித்து, அன்பை பரிமாறிக்கொண்டனர்.
புதுக்கோட்டை மாலையீடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு முத்துராஜா எம்.எல்.ஏ. இனிப்பு வழங்கி வரவேற்றார். அப்போது கல்வி மாவட்ட அதிகாரி மஞ்சுளா உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருமயம்
திருமயம் சந்தைப்பேட்டையில் உள்ள பாத்திமா தொடக்கப் பள்ளி, மணவாளன் கரை மற்றும் சீமானூர் தொடக்கப் பள்ளி ஆகியவற்றுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்று மாணவ-மாணவிகளுக்கு பூ கொடுத்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகப்படுத்தினார். அப்போது மாவட்ட கலெக்டர் கவிதாராமு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.