வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: கரூரில் 8 லட்சத்து 99 ஆயிரத்து 622 வாக்காளர்கள்
கரூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 8 லட்சத்து 99 ஆயிரத்து 622 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
கரூர்,
வரைவு வாக்காளர் பட்டியல்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 2022-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 2022-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி, கரூர்
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 400 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 11 ஆயிரத்து 904 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 311 வாக்காளர்கள் உள்ளனர்.
கரூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 4 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 904 பெண் வாக்காளர்களும், 20 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 928 வாக்காளர்கள் உள்ளனர்.
கிருஷ்ணராயபுரம், குளித்தலை
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 935 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 9 ஆயிரத்து 139 பெண் வாக்காளர்களும், 43 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 117 வாக்காளர்கள் உள்ளனர்.
குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 672 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 584 பெண் வாக்காளர்களும், 10 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 266 வாக்காளர்கள் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 4 லட்சத்து 33 ஆயிரத்து 11 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 66 ஆயிரத்து 531 பெண் வாக்காளர்களும், 80 இதர வாக்காளர்களும் என மொத்தம் 8 லட்சத்து 99 ஆயிரத்து 622 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல்
பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு அதில் அவர்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள ஏதுவாக, கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், கரூர் மாநகராட்சி மற்றும் குளித்தலை நகராட்சி அலுவலகங்கள், வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக 1-ந்தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை வைக்கப்படவுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மகளிர் திட்ட அலுவலர் வாணி ஈஸ்வரி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) சைபுதீன், தேர்தல் பிரிவு தாசில்தார் பிரபு உள்ளிட்ட அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1,045 வாக்குச்சாவடி மையங்கள்
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 253 வாக்குச்சாவடி மையங்களும், 160 வாக்குச்சாவடி அமைவிடங்களும், கரூர் சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குச்சாவடி மையங்களும், 95 வாக்குச்சாவடி அமைவிடங்களும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 258 வாக்குச்சாவடி மையங்களும், 201 வாக்குச்சாவடி அமைவிடங்களும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 268 வாக்குச்சாவடி மையங்களும், 163 வாக்குச்சாவடி அமைவிடங்களும் ஆக மொத்தம் 1,045 வாக்குச்சாவடி மையங்களும், 619 வாக்குச்சாவடி அமைவிடங்களும் உள்ளன.
சிறப்பு முகாம்கள்
1.1.2022 அன்று 18 வயது நிறைவடைந்த அனைவரும் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொள்ளலாம். 1.11.2021 முதல் 30.11.2021 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் மனுக்களை அளிக்கலாம்.
வருகிற 13, 14 மற்றும் 27, 28 ஆகிய நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த சிறப்பு முகாம்களிலும் வாக்குச்சாவடி அலுவலரிடம் வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் மற்றும் இடமாற்றம் உள்ளிட்டவை குறித்த மனுக்களை அளிக்கலாம்.
மேலும், http://www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் voter helpline என்ற மொபைல் செயலி மூலமாகவும் மனுக்களை அளிக்கலாம். எனவே, தகுதியுடைய வாக்காளர்கள் அனைவரும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.