வேலூர் மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு முதல் நாளே விடுமுறை
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்ததால் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் பல மாதங்களுக்கு பின்னர் பள்ளிக்கு புறப்பட்ட 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்ததால் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் பல மாதங்களுக்கு பின்னர் பள்ளிக்கு புறப்பட்ட 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்தாண்டு மார்ச் மாதம் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொற்று பரவல் குறைவு காரணமாக முதற்கட்டமாக அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள்திறக்கப்பட்டது.
இந்த நிலையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க ஏற்பாடு செயய்யப்பட்டிருந்தது.
பள்ளிகளுக்கு விடுமுறை
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது. நேற்று அதிகாலையிலும் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. அதனால் சாலையோரத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி நின்றது. மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என்று வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவித்தார்.
அதனால் பல மாதங்களுக்கு பின்னர் மீண்டும் பள்ளிக்கு ஆர்வத்துடன் புறப்பட்ட 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்களுக்கு இன்று (செவ்வாய்கிழமை) முதல் பள்ளிகள் செயல்பட உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 முதல் நேற்று காலை 8.30 மணி வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
வேலூர் -7.6, பொன்னை-5.4, காட்பாடி - 4, மேல் ஆலத்தூர் - 3.2, குடியாத்தம் - 2.2, அம்முண்டி - 2.