ஆஸ்பத்திரிக்குள் தண்ணீர் புகுந்தது

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் ஆஸ்பத்திரிக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.;

Update: 2021-11-01 18:25 GMT
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் ஆஸ்பத்திரிக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டனர். 
பலத்த மழை
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அனைத்து சாலைகளிலும் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. தண்ணீரை வெளியேற்ற போதிய வடிகால் வசதி இல்லாமல் உள்ளது. வடிகால்கள் உள்ள இடங்களில் முறையாக தூர்வாரி பராமரிக்காததால் தண்ணீர் செல்வது தடைப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் சாக்கடை நீரும், மழை நீரும் கலந்து நிற்பதால் நடந்து செல்பவர்கள், வாகன ஒட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். 
மழைநீர் புகுந்தது
சாலைகள் குண்டும்- குழியுமாக பல்லாங்குழி போல உள்ளதால் 
வாகன போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் தீபாவளி பொருட்கள் வாங்க வந்த மக்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். எனவே மழை நீர் தேங்காதாவாறு வடிகால்களை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர் மழை காரணமாக திருவாரூர் விஜயபுரம் அரசு தாய் சேய் நல
ஆஸ்பத்திரிக்குள்  மழை நீர் புகுந்தது. 
இதனால் ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது. மேலும் ஆஸ்பத்திரியில் ஊசி போடும் இடம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த ஆஸ்பத்திரி  தாய்-சேய் நல ஆஸ்பத்திரி என்பதால் அதிகமாக பிரசவங்கள் நடைபெறும் நிலையில் கர்ப்பிணிகள் மிகுந்த இடையூறை அனுபவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்